பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
கடவுளின் மக்களாய் ஜெபித்த அநேகரைக் குறித்துப் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் பலர் ஜெபிப்போராய் இருந்தனர். ஜெபம் அவர்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
யோசுவா 19ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். இஸ்ரவேல் மக்கள் பகைவருடன் போராடிக்கொண்டிருந்தனர். பிற்பகலாயிற்று. இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. இருள் சூழ்ந்துவிட்டால் பகைவர்கள் ஓடி மறைந்து தப்பிவிடுவர். இந்நிலையில் யோசுவா ஜெபித்து சந்திர, சூரியன் தங்கள் நிலையிலேயே நிற்கும்படி கடவுளிடத்தில் கேட்டான். கேட்டபடி நடந்தது. பகல் பொழுது தொடர்ந்தது. இஸ்ரவேல் மக்கள் பகைவரை வென்று மகத்தான வெற்றிபெற்றனர்.
யாக்கோபைப் பாருங்கள். கடவுளிடத்தில் இராமுழுவதும் ஜெபிக்கும் முன்னதாக அவன் நீதிமானாய் இருக்கவில்லை. ஆனால் அவன் ஜெபிக்கும் பழக்கமுடையவனாய் கடவுள் ஜெபத்திற்குப் பதில் கொடுப்பார் என்றும் அறிந்திருந்தான். இக்கட்டு நேரத்தில் ஜெபித்தான். ஏசா தன்னைக் கொல்லவிருப்பதாக எண்ணித் தன் வீட்டைவிட்டு வெளியேறித் தன் மாமன் லாபான் வீட்டிற்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இராத்தங்கினான். பூமியையும் வானத்தையும் இணைக்கும் ஓர் ஏணியையும், தேவதூதர்கள் மேலும் கீழும் இறங்குகிறதையும் கனவில் கண்டு விழித்தான். கடவுள் அவ்விடத்தில் இருப்பதை உணர்ந்தான். உடனடியாக ஜெபித்துக் கடவுளுடன் உடன்படிக்கையும் செய்தான். ஆதி. 28:20-22ல் யாக்கோபு என்ன கூறினான் என்பதைப் பாருங்கள். தனக்குக் கடவுளின் உதவி தேவை என்பதை உணர்ந்து கடவுள் தன் ஜெபத்தைக் கேட்டால் தான் சில காரியங்களைச் செய்வதாக உறுதியளித்தான்.
இருபது ஆண்டுகளாக லாபான் வீட்டில் யாக்கோபு வசித்தான். லாபானின் இரு குமாரத்திகளைத் திருமணம் செய்தான். பிள்ளைகளால் ஆசீர்வதிக்கப்பட்டுச் செல்வம் கொழிக்க வாழ்ந்து இறுதியில் தன் வீடு திரும்பினான். வீட்டை நெருங்கும் சமயம் தன் சகோதரன் ஏசாவைச் சந்திக்கவேண்டுமே என்ற எண்ணம் உண்டாயிற்று. மிகவும் பயந்தான். ஆனாலும் கடவுள் தன்னோடு இருப்பதாக உறுதியளித்திருப்பதை நினைவில் கொண்டான். இராமுழுவதும் ஜெபித்து தேவனோடு போராடி இறுதியில் யாக்கோபு வெற்றியும் பெற்றான். என்னை ஆசீர்வதித்தாலொழிய போகவிடேன் என்று கடவுளைப் பிடித்துக்கொண்டான். பெருத்த ஆசீர்வாதங்களைப் பெற்றதோடல்லாமல் அவன் பெயரும் புதிதாக்கப்பட்டது. யாக்கோபு விரும்பிக் கேட்டதற்கு மேலாக கடவுள் பதிலளித்தார். மறுநாள் யாக்கோபும் ஏசாவும் அன்புடன் ஒருவரையொருவர் சந்தித்தனர். இது எப்படி எண்டாயிற்று? தன்னை ஏமாற்றிய யாக்கோபு மேல் ஏசா எப்படி அன்புசெலுத்த முடிந்தது? இதற்குப் பதில் ஒன்றே ! யாக்கோபுவின் ஜெபத்தைக் கேட்ட கடவுள் ஏசாவின் மனதில் கிரியைசெய்து அவன் கோபத்தைத் தணித்து அவன் மனதையும் மாற்றினார்.
சாமுவேலின் தாய் அன்னாளைப் பாருங்கள். அநேக ஆண்டுகள் பிள்ளையற்ற தாயின் ஜெபத்திற்குப் பதிலாகப் பிறந்தவன் சாமுவேல். அவள் தேவாலயத்திற்குப்போய் ஜெபிக்கும் நேரத்தில் ஏலி அவள் வெறித்திருப்பதாக நினைத்தான். அவள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருந்ததால் தெளிவாக சொற்கள் வெளிவராத நிலையில் தன் ஆத்துமாவில் கடவுளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். கடவுள் தன் விண்ணப்பத்தைக் கேட்டதாக மனதில் உறுதி ஏற்பட்டதும் குறித்த காலத்தில் சாமுவேல் பிறந்து கடவுளுடைய பிள்ளைகளை மீண்டும் கடவுள் பக்கமாய்த் திரும்பினான்.
அன்னாள் ஜெபித்தபோது ஆண்டவருடன் உடன்படிக்கை ஒன்று செய்தாள். அதை நாம் மறக்கலாகாது. விண்ணப்பத்தில் உடன்படிக்கை செய்பவர்கள் வல்லமையுடன் ஜெபிப்பார்கள். நம்மையும் நம்முடையவைகளையும் கடவுளிடம் ஜெபத்தில் தத்தம்செய்ய அவர் விரும்புகிறார்.
சிம்சோன் விந்தை மனிதன். அவனிடம் குறைகள் பல இருந்தபோதிலும் கடவுளை அறிந்திருந்தான். கடவுளுடன் ஜெபித்து பேசும் விந்தையும் அறிந்திருந்தான்.
இஸ்ரவேல் மக்கள் கடவுளைவிட்டுச் சோரம் போனார்கள். விண்ணப்பிக்கும் மனிதர் அவர்களை மீண்டும் தேவன் பக்கம் வழிநடத்தினார். பாவத்தில் விழுந்த இஸ்ரவேல் மக்கள் ஜெபத்தின்மூலம் வெற்றி பெற்றனர். சங்கிலிகளினால் பிணைக்கப்பட்ட கைதிகள் போலிருந்த இஸ்ரவேலர் ஜெபத்தின்மூலம் விடுதலைபெற்றனர். அடிக்கடி இந்தப் பாடங்களை கற்றும் அடிக்கடி மறந்தும் போயினர். அவர்கள் விண்ணப்பித்தபொழுதெல்லாம் தேவன் அவர்களுக்கு உதவினார். அவருடைய மக்களுக்கு உதவிசெய்ய தேவனுக்கு எதுவும் கடினமானதாகப்படவில்லை. தேவனின் பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு சமயத்தில் இக்கட்டு நேரிடுவது இயல்பு. வெற்றிக்குமுன் இக்கட்டு வருவது இயற்கை. ஆனால் விண்ணப்பம் எந்த இக்கட்டினையும் நீக்கக்கூடும். சிம்சோனுக்கு உடல் வலிமையிருந்த போதிலும் அது போதுமானதாயில்லை. அவன் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்ததும் அருகிலிருந்த கழுதையின் தாடையை எடுத்து தன் பகைவர் ஆயிரம்பேரைக் கொன்றான். இதன்பின்பு அகோர தாகம் ஏற்பட்டுத் தண்ணீரின்றி மடிந்துபோகும் நிலையை அடைந்தான். அந்நிலையில் அவன் ஜெபித்தான். அந்த இடத்திலிருந்து ஒரு நீரூற்று புறப்பட்டது. சிம்சோன் தண்ணீர் அருந்தி மகிழ்ச்சியடைந்தான் (நியா.15:14-19 ஐப் படியுங்கள்) துன்ப நேரத்தில் சிம்சோன் ஆண்டவரை நோக்கிப் பார்த்தான். பாவத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும் ஆண்டவர் தன்னைக் காப்பாற்ற முடியுமென நினைத்தான். பாவத்தை விட்டு விலகும்போது ஆண்டவர் தான் விரும்புவதனையும் தரக்கூடும் என்பதைத் தன் வாழ்வின் இறுதியில் சிம்சோன் உணர்ந்தான்.
உண்மையான கடவுளை அறியாத தெலீலாள் என்ற பெலிஸ்திய பெண்ணைச் சிம்சோன் நேசித்தான். அவள் சிம்சோனின் பலம் சவரகன் கத்திபடாத தலைமயிரில் அடங்கியிருக்கிறது என்பதைத் தன் திறமையால் அறிந்து பகைவர்களுக்கு காட்டிக்கொடுத்தாள். பெலிஸ்தரோ அவனைக் கொண்டுபோய் கண்களைப் பிடுங்கித் துன்புறுத்தினர். தகோனுக்கு விழாக் கொண்டாடிய சமயம் கண்ணிழந்த சிம்சோனை அழைப்பித்து அவனைக் கேலி செய்தனர். தன் வழிகாட்டியாய் அமைந்தவனிடம் கோயிலைத் தாங்கி நின்ற தூண்களைத் தான் தடவிப் பார்க்கும்படி உதவிசெய்ய சிம்சோன் கேட்டான். அக்கோயிலில் அச்சமயம் மூவாயிரம் மக்கள் இருந்தனர். சிம்சோன் கடைசி முறையாக தன் கண்களைப் பிடுங்கின தன் பகைவர்களைப் பழிவாங்க உதவும்படி கடவுளிடத்தில் ஜெபித்தான். ஜெபித்து முடிந்ததும் கோயிலின் இரு தூண்களையும் தன் இரு கரங்களால் பிடித்துத் தன் பலன் முழுவதையும் பிரயோகித்தான். கட்டடம் இடிந்து விழுந்தது. தன் வாழ்நாள் முழுவதும் அழித்தவரைவிடச் சிம்சோன் தான் இறந்த நாளில் அழித்த பகைவர் ஏராளமானோர் என்பதை நியாயதிபதிகள் 16:26-30 கூறும். உண்மையாகவே சிம்சோனின் விண்ணப்பம் கேட்கப்பட்டது.
அடுத்து யோனாவைப் பார்ப்போம். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தும் அவரிடமிருந்து ஓடிப்போக முயன்றான். நினிவே பட்டணத்தாரிடம் அவர்கள் பாவத்தைக் குறித்துக் கண்டித்து நினிவே அழிக்கப்படும் என்று கூறும்படி தேவன் கூறினார். யோனாவிற்கு இந்தக் கட்டளையைச் செயல்படுத்த விருப்பமில்லை. நினிவேயைவிட்டு விலகியிருக்கும் தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். நினிவேக்குப் போகும்படி கட்டளை கொடுத்த கர்த்தர் கப்பலில் ஒளிந்துகொள்ளும் தன்னையும் காணமுடியும் என்பதை மறந்துவிட்டான். யோனா கடலில் பிரயாணம் செய்யும் சமயம் புயல் ஏற்பட்டது. புயல் ஏற்பட்டதினிமித்தம் கர்த்தர் கோபமடைந்திருக்கிறார் என்பதைக் கப்பற்காரர் புரிந்துகொண்டு தேவனின் கோபத்தைத் தணிக்கும் முறையில் யோனாவைக் கடலுக்குள் எறிந்து தங்களைக் காத்துக்கொண்டனர். ஆனாலும் கடலில் ஒரு மீன் அவனை விழுங்கும்படி கர்த்தர் ஒழுங்கு செய்திருந்தார். கர்த்தர் யோனாவோடிருந்ததால் இவ்விந்தையான முறையில் யோனாவைத் தன் பக்கமாய்ச் சேர்த்துக்கொண்டார்.
இக்கட்டு நிலையில் விண்ணப்பிக்கப் பழகியிருந்த யோனா நகரத்தை ஒத்த மீன் வயிற்றிலிருந்து தன் நிர்பந்த நிலையில் விண்ணப்பம் பண்ணினான். கர்த்தரிடத்தில் முறையிட்ட அவனைக் கர்த்தர் கேட்டருளினார். ஜெபத்திலேயே உடன்படிக்கையும் செய்தான் யோனா என்பது (யோனா 2:2-9) லிருந்து விளங்கும். தன்னிடத்தில் உண்மையற்றிருந்த யோனாவைக் கர்த்தர் காப்பாற்றினார். கர்த்தரால் ஆகாதது ஒன்றுமில்லை. தன் பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்க அவர் ஆவலுள்ளவராயிருக்கிறார். கர்த்தர் மீனுக்குக் கட்டளை கொடுக்க, மீன் கரையிலே யோனாவைக் கக்கியதை நாம் யோனா 2:10ல் காண்கிறோம்.
ஆச்சரியமான முறையில் விண்ணப்பத்திற்கு பதிலளித்துக் காப்பாற்ற வல்லவர் கர்த்தர். தேவனோடு நாம் பேசுவதே விண்ணப்பம். அவர் ஜெபங்களைக் கேட்டுப் பதிலளிக்கிறார். பழையஏற்பாட்டில்  நாம் காணும் விண்ணப்ப வீரர் பலர் இதை நம்பினர் என்பதை அவர்கள் வாழ்க்கை நமக்குத் தெளிவாக்குகிறது. அவர்கள் உண்மை ஜெபவீரர்கள்.
நாம் சரியான முறையில் ஜெபிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். எளிதான முறையில் ஜெபித்து பெரிய காரியங்களைச் சாதிக்கலாமெனும் அநேக முறைகளில் ஜெபிக்க மறந்துவிடுகிறோம். நாம் வளர வளர ஜெபிக்கவேண்டிய முறையில் ஜெபிக்கவும் தவறுகிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்கள் எளிதான விசுவாசத்துடன் சிறு பிள்ளை தன் பெற்றோரை நம்புவதுபோல் வாழ்ந்ததால் அவர்களால் நன்கு ஜெபிக்கமுடிந்தது.
தாவீதைச் சற்று கவனிப்போம். தாவீது ஒரு ஜெபவீரன். சங்கீதம் 55:17ல் காண்கிறபடி காலையும், நண்பகலும், மாலையும் அவன் ஜெபித்தான். ஜெபத்தோடு கீதங்களைப் பாடினான். கர்த்தரிடத்தில் செல்லும் வழியை அவன் அறிந்திருந்தான். வாருங்கள்! நம்மை உருவாக்கின கர்த்தருக்கு முன்பாக திட்டவட்டமாய் அழைப்பதைப் பாருங்கள்! (சங்.95:6). ஜெபத்தைக் கேட்கிறவரே! மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் என்று சங்கீதம் 65:2ல் கூறியுள்ளபடி கர்த்தர் ஜெபத்தைக் கேட்கிறவர் என்பதைத் தாவீது அறிந்திருந்தான்.
உரியாவின் மனைவியாகிய பத்சேபாளிடத்தில் பாவம் செய்த காரணத்தால் தாவீதுக்குப் பிறந்த மகன் வியாதிப்பட்டான். தாவீது பாவத்துக்குட்பட்டதால் தங்களுடைய தேவர்களைப்போல கர்த்தரும் ஒருவர் என்று கூற அந்நிய தேவர்களைப் பின்பற்றியோர்க்கு தருணம் கிடைத்தது என்று தேவன் உணர்ந்தார். தன் பிள்ளையைக் குணமாக்கும்படி ஒருவார காலமாய் ஜெபித்தான் தாவீது. கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்கவில்லையெனினும் தாவீது நம்பிக்கை இழக்கவில்லை. கர்த்தர் அந்தப் பிள்ளைக்கு உயிர் கொடுக்கவில்லையெனினும் அவனிலும் பெருமை பொருந்திய ஒரு மகனைப் பின்னால் தாவீதுக்குக் கொடுத்தார். சாலமோன் அநேகருக்கு ஆசீர்வாதமாயிருந்தான்.
கர்த்தர், நாத்தான் மூலமாய்த் தாவீது செய்த விபசாரம், கொலை ஆகிய பாவங்களை எடுத்துக்காட்டியபோது தாவீது ஜெபித்துத் தன் பாவத்தை அறிக்கையிட்டான். தன் செயலைக் குறித்து உண்மையாகவே மனஸ்தாபப்பட்டான். அவன் ஜெபமே சங்கீதம் 51. கர்த்தர் அவன் பாவத்தை மன்னித்ததால் மீண்டும் தன் இருதயத்தில் இரட்சிப்பின் மகிழ்ச்சியை அடைந்தான். பாவிகள் தங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்பி ஜெபிக்கும்போது கர்த்தர் பாவத்தை மன்னித்துப் புதிய தன்மையைக் கொடுக்கிறார். சங்கீத புத்தகம் முழுவதும் ஜெபத்தின் முக்கியத்துவத்தையே நம் ஒவ்வொருவருக்கும் சுட்டிக் காட்டுகிறது.
சாலோமோனும் ஜெபிக்கிற மனிதனாயிருந்தான். அநேகத் தவறுகளிழைத்தபோதும் ஜெபத்தைக் கேட்கும் தேவனை ஒருபோதும் மறவாதவனாகவே சாலோமோனும் ஜெபித்தான். தன் அரசாட்சியின் தொடக்கத்தில் தனக்கு உதவிசெய்யும்படி தேவனிடம் கேட்டான். ஒரு சமயம் கிபியோனுக்குச் சென்று பலிகள் செலுத்தினான். அன்றிரவு கர்த்தர் சாலோமோனுக்குத் தரிசனமாகி, உனக்கு வேண்டியதைக் கேள் என்றார். சாலோமோன் நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, பகைவர்மீது வெற்றியையோ கேட்கவில்லை. பதிலாக நன்மை தீமையைப் பகுத்தறிந்து மக்களை நீதியாய் ஆளத்தக்க ஞானமுள்ள இருதயத்தைத் தரும்படி கர்த்தரிடத்தில் கேட்டான். சாலோமோன் கேட்டதைக் குறித்துக் கர்த்தர் மகிழ்ச்சியடைந்து அவன் கேட்டதற்கும் மேலாகத் தந்தருளினார் என்று 1.இராஜாக்கள் 3:3-14ல் காண்கிறோம். சிறு குழந்தையைப்போல சாலோமோன் ஜெபித்தான். தனக்கு அதிக தேவையாயிருந்ததாக தான் உணர்ந்ததைக் கர்த்தரிடம் கேட்டான். அவன் கேட்டதற்கும் மேலாகக் கர்த்தர் தந்தருளினார்.
தேவாலயம் கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட பின்னர் சாலோமோன் மீண்டும் ஜெபித்தான். பரிசுத்த வேதாகமத்தில் நாம் காண்கிற நீண்ட ஜெபம் இதுவே. சாலோமோன் கிபியோனில் ஜெபித்ததைக் கேட்டதுபோலவே எளிதாகவும் தெளிவாகவுமிருந்த இந்த ஜெபத்தையும் கர்த்தர் கேட்டருளினார். அவன் ஜெபித்து முடித்ததும் கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை நிறைத்ததாய் நாம் 2. நாளாகமம் 7:1ல் காண்கிறோம். தம் மகிமையால் தேவாலயத்தை நிறைத்ததன்மூலம் இறைவழிபாட்டிற்கென சாலோமோன் கட்டி எழுப்பிய தேவாலயத்தின்பேரில் தாம் பிரியமுள்ளவராயிருப்பதைக் கர்த்தர் நிரூபித்தார். ஆனால் வயதானபோது கர்த்தரைவிட்டு விலகிப்போனது அவன் வாழ்க்கையில் காணக்கிடந்த வருத்தமான செயலாகும்.
கர்த்தருடைய பிள்ளைகளாய் ஜெபித்த பிற அநேகரைப் பற்றியும் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். இயேசுவில் நற்செய்தியைக் குறித்த நிகழ்ச்சிகளை முன்னோடியாய் அறிவித்துச் சென்ற ஏசாயாவும், எருசலேமுக்காக அழுது புலம்பிய எரேமியாவும் ஜெபவீரரே. இன்னும் ஏராளமானோரைக் குறித்து பழைய ஏற்பாடு கூறுகிறது. பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது இம்மக்கள் மனதில் ஜெபம் எத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை உணர்ந்து படிப்போமாக !
விண்ணப்ப வீரன் ஆபிரகாம்
ஜெபத்தில் நம்பிக்கை வைத்த பழைய ஏற்பாட்டு மனிதரில் கடவுளின் நண்பனாகிய ஆபிரகாமும் ஒருவன். இவன் இன்றைக்கு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். அன்றும் , அதற்கு முன்பு கடவுள் மனிதனைத் தோற்றுவித்த காலத்திலும், ஜெபிக்கவேண்டியதைக் குறித்து மனிதர் அறிந்திருந்தனர். வாழ்க்கைமுறை எளிதான காலத்தும், கடினமான காலத்தும், எக்காலத்தும் ஜெபம் தேவை.
தானறியாத ஓரிடத்திற்குப் போகும்படி ஆபிரகாமை தேவன் அழைத்தாh. தன் குடும்பத்தோடும், வேலைக்காரர்களோடும், பணிமூட்டுகளோடும் புறப்பட்டான் ஆபிரகாம். எந்த இடத்தில் இராத்தங்கினாலும் அங்கெல்லாம் ஒரு பலிபீடம் எழுப்பித் தன் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொண்டான். அவனுடைய குடும்பத்தினரும் பலி செலுத்தித் தொழுது துதிப்பதில் பங்கு பெற்றனர். தனித்து ஜெபித்தாலும் குடும்பஜெபமில்லா வீடு கூரையில்லா வீடு என்பதற்கேற்ப குடும்ப ஜெபத்தின் வல்லமையையும் ஆபிரகாம் உணர்ந்திருந்தான்.
கர்த்தர் தம்மைப் படிப்படியாக ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தி அவனோடு பேசினார். ஆபிரகாமும் கர்த்தரை அதிகமதிகமாய் கிட்டிச் சேர்ந்தான். ஜெபித்தான். ஒருமுறை கர்த்தரும் அவனுடன் பேசினார். சாராளுக்கும் ஆபிரகாமுக்கும் அவர்கள் வயதான காலத்தில் ஒரு மகன் பிறப்பான் என்று கூறி ஆபிரகாமை வியப்புக்குள்ளாக்கினார். வருங்காலத்தைக் குறித்த திட்டங்களையும் வெளிப்படுத்தினார். ஆபிரகாம் அவன் மகன் இஸ்மவேலுக்காகவும் ஜெபித்தான்.
சோதோம் பட்டணத்தில் ஆபிரகாமின் உறவினன் லோத்து வாழ்ந்தான். சோதோமை அழிக்கப்போவதாய் தேவன் ஆபிரகாமிடம் கூறியிருந்தார். சோதோமுக்காக ஜெபித்தான் ஆபிரகாம். பத்து நீதிமான்கள் இருந்தாலும் சோதோம் பட்டணத்தைக் கர்த்தர் அழிக்கக்கூடாது என்று மன்றாடினான். அதற்குமேல் ஆபிரகாம் மன்றாடவில்லை. ஒருவேளை ஒரு நீதிமான் நிமித்தமும் சோதோமைக் கடவுள் அழிக்கக்கூடாது என்று ஆபிரகாம் கேட்டிருப்பின் லோத்தின் நிமித்தமாக சோதோமை அழிக்காதிருந்திருக்கலாம்.
ஆபிரகாம் கேராரிலே தங்கியபோது அந்நாட்டு மன்னனாகிய அபிமெலேக்கு சாராளைத் தன் அந்தப்புரத்துப் பெண்களுடன் சேர்த்துக்கொள்ளும்படிக்குத் தன்னைக் கொன்றுவிடுவானோ என்று பயந்தான். ஆகவே சாராள் தன் உடன் பிறந்தவள் என்று அபிமெலேக்குக்கு ஆபிரகாம் அறிவித்திருந்தான். ஆனால் இரவில் சொப்பனத்தில் அபிமெலேக்குடன் தேவன் பேசினார். சாராள் ஆபிரகாமின் மனைவி என்பதையும் தெளிவுபடுத்தினார். மேலும் ஆதியாகமம் 20:7ல் காண்கிறபடி, அந்த மனிதனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு என்றும் கூறினார். சாராளை அபிமெலேக்கு சேர்த்துக்கொள்ள விரும்பியதினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்கு வீட்டாரின் கர்ப்பத்தையெல்லாம் அடைத்துப்போட்டிருந்தார். சாராளை அனுப்பாதிருந்தால் சாவு ஏற்படும் என்று சாபமும் கொடுத்திருந்தார். மேலும் சாராளை அனுப்பிவிடும்போது ஆபிரகாம் அபிமெலேக்குக்காக ஜெபிப்பான் என்றும் கூறினார். அதுபோலவே சாராள் தன்னிடம் திரும்பிவந்ததும் ஆபிரகாம் அபிமெலேக்குக்காகவும் அவன் வீட்டாருக்காகவும் மன்றாடினான். மன்றாட்டிற்குப் பதிலாக சாபம் நீங்கப்பெற்று அபிமெலேக்கு பிள்ளையும் பெற்றான் என்பது ஆதியாகமம் 20:17-18 வசனங்கள் மூலம் தெளிவாகிறது.
இதுபோன்ற அனுபவம் யோபுவுக்குமிருந்தது. யோபுவுக்கும் அவன் தோழர்களுக்கும் கடவுள் ஏன் இத்தீராத தொல்லைகளை யோபுவுக்குக் கொடுக்கிறார் என்று புரிந்துகொள்ளமுடியவில்லை. யோபு அந்தரங்கத்தில் பாவியாயிருப்பதாலேயே துன்பம் நேரிடுகிறதென அவன் தோழர்கள் முடிவு செய்தனர். ஆனால் இந்நிலையில் யோபு விண்ணப்பவீரன் என்பதைக் கடவுள் அறிந்து அதை அவர் வெளிப்படுத்தி யோபு உங்களுக்காக ஜெபிப்பான். அதற்கு நான் செவிகொடுப்பேன் என்று யோபுவின் தோழர்களிடம் கூறினார். அவனுடைய தோழர்க்காய் யோபு மன்றாடியபோது அவனுடைய இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான் என்பதற்கு யோபு 42:8-10 உறுதி கூறும். தன் சித்தத்தை நிறைவேற்றவே தோழர்களைக் கடவுள் யோபினிடம் அனுப்பினார். அவன் அவர்களுக்காக வேண்டுதல் செய்தான்.
ஆபிரகாம் விண்ணப்பவீரன். அவன் ஜெபிக்க கடவுள் முன்னிலையில் நின்றான். நிறைந்த மன்றாட்டுக்களால் அவன் வாழ்க்கையைக் கர்த்தர் பரிசுத்தமாக்கினார். தன் பயணத்தில் இடையிடையே தங்கிய இடங்களிலெல்லாம் கடவுளுக்குப் பலி செலுத்தி விண்ணப்பித்தான். அன்றாடம் காலையிலும் ஜெபிக்கத் தவறவில்லை.
மற்றோருக்காய் மன்றாடிய மோசே
கடவுளின் சித்தத்தை மனிதன் அறிந்து அதை முழுமை பெறச் செய்வதே உண்மை ஜெபத்தின் நோக்கமாகும். மனிதன் ஆசீர்வதிக்கப்படவேண்டுமென்பதே கடவுளின் சித்தம். ஆனால் பாவம் நம்மைக் கடவுளிடத்தினின்றும் பிரித்து ஆக்கினையையும் வருவிக்கிறது. மாறாக ஜெபம் தேவ கோபாக்கினையைத் தள்ளிவைப்பதோடு ஆசீர்வதித்து, அவரது நோக்கத்தையும் நிறைவேற்றுகிறது. பொன்னாலான கன்றுக்குட்டியை இஸ்ரவேல் மக்கள் வழிபட்டதையும், தேவன் மக்களை அழிக்க முனைந்ததையும் மோசே இடையீடுபட்டதையும் நினைத்துப் பாருங்கள்.
மோசேயின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது ஜெபம். கடவுள் கற்பனைகளைக் கொடுத்தபோது நாற்பது நாள் இராப் பகல் விண்ணப்பித்தான் மோசே. கடவுளோடு ஒன்றுபட்டதால் அவன் முகம் தெய்வ ஒளிபெற்றுப் பிரகாசமடைந்தது. தீமையை எதிர்த்து உத்தமமாய் மன்றாடும் சமயம் கடவுள் நம் தன்மையையும், பண்பையும் தம் ஒளியால் பிரகாசிப்பிக்கிறார். இராமுழுவதும் கடவுளோடு போராடி யாக்கோபு இஸ்ரவேலனானான். விண்ணப்பத்தின் மூலம் எத்தர்கள் பலர் மனந்திரும்பி கடவுளின் வன்மையால் அரச மகிமை பெற்றிருக்கின்றனர்.
கடவுளுக்காக சாதிக்க மோசேக்கு ஒரு பெரிய வேலை கொடுக்கப்பட்டது. கருத்தூன்றிச் செய்யவேண்டிய ஆழ்ந்த வேலை அது. இந்நிலையில் அவனுக்குத் தேவையான பெலனையும் சக்தியையும் கடவுள் கொடுத்து தாங்கினார். ஆனால் எப்படி? ஜெபத்தின்மூலமே. ஜெபம் கடவுள் நம்மேல் கொண்டுள்ள அன்பையும் இரக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்துகிறது. அதோடு நில்லாமல் ஆக்கினையை நீக்கி இரக்கத்தைக் காணவும் உதவுகிறது.
மக்கள் கடவுளிடத்து முறையிட்டபோது அடிமைத்தனத்தினின்று அவர்களை மீட்க மோசே அனுப்பப்பட்டான். மக்கள் ஜெபிக்க ஆரம்பித்தபோதே எகிப்தின் ஆதிக்கத்தினின்றும் அவர்களுக்கு விடுதலை கிடைக்க ஆரம்பித்தது (1.சாமு.12:8). ஜெபமே கடவுளுடனிருக்கக்கூடிய நேரிடைத் தொடர்பானதால் எதையும் சாதிக்க ஜெபம் தேவை. மக்கள் ஜெபிக்கும்போது கடவுள் செயல்படுகிறார். கடவுளின் சித்தப்படி மக்களை வழிநடத்த மோசேக்கு உதவியது ஜெபமே. ஜெபமின்றி கடவுளின் பணி ஆற்றுவது எங்கனம்? கடவுளுக்குச் சேவை செய்ய விரும்பும் ஒவ்வொரு மனிதனும் ஜெபிக்கவேண்டும்.
மோசே ஜெபித்தபோது நான்குமுறை தேவகோபம் குறைந்தது. தேசம் தவளைகளாலும், வண்டுகளாலும் வெட்டுக்கிளிகளாலும் நிறைந்தபோதும், மழையும் இடிமுழக்கமும் தேசத்தை சீர்குலைத்தபோதும் பார்வோன் மோசேiயை நோக்கிக் கர்த்தரிடத்தில் முறையிடுமாறு கேட்டுக்கொண்டான். மோசே ஜெபித்து வெற்றிகண்டான் என்று வரலாறு கூறுவதற்குச் சான்று யாத்திராகமம் 8:12,13,29,  9:33, 10:18.
கற்பனைகளை மோசேமூலம் கடவுள் மக்களுக்கு வழங்கினார். எனினும் ஜெபத்தின் முக்கியத்துவத்தை மோசே மறந்தானில்லை. அவன் ஜெபித்தான். ஆபிரகாமைப்போல மோசேயும் ஜெபிக்க அறிந்திருந்தான். ஜெபத்தில் நாம் நேரிடையாக கடவுளிடம் தொடர்பு கொள்கிறோம் என்பதை மன்றாட்டுக்கு மறுமொழியாகக் கடவுள் செயல்படுவது மோசேக்கு தெரிந்திருந்தது. எல்லாச் சூழ்நிலையிலும் கடவுள் தம் மக்களின் விண்ணப்பங்களைக் கேட்டுச் செயல்பட ஆயத்தமாயிருக்கிறார்.
கடவுளை முகமுகமாய் நோக்கி அவர் பிரசன்னத்திலேயே வாழ்ந்தவன் மோசே. இதன் காரணத்தால் மோசே ஜெபிக்கத் தேவையில்லை என எண்ணுதல் கூடாது. மாறாக கடவுள் பிரசன்னத்திலேயே இருந்ததால் ஜெபம் அதிகம் தேவைப்பட்டது. தேவனோடு நெருங்கி வாழ வாழ ஜெபமும் அதிகம் தேவைப்படும். கடவுளை உணராதவர்கள் அவர் பிரசன்னத்தில் பழக்கப்பட்டிராதபடியால் கருத்துடன் ஜெபிக்க இயலாது. இக்கட்டான சூழ்நிலைகளில் ஆண்டவர் எல்லாம் வல்ல கடவுளாதலால் எக்காலத்திலும் அவரிடம் ஜெபத்தின் மூலம் உதவியை நாடுவது நல்லதன்றோ !
ஆதியிலிருந்து தாம் உருவாக்கிய ஒரு திட்டத்தைச் செயல்படுத்த மோசேயைக் கருவியாகக் கொண்டார் தேவன். செய்யவேண்டியதை வெளிப்படுத்தியும் காட்டினார். தேவனின் கைக்குள்ளிருக்கும் எந்தச் சூழ்நிலைக்கும் ஜெபம் அவசியம். நாற்பது நாள் இராப் பகலாய் தன் சொந்த தேவைகளையும்கூட உணராது இஸ்ரவேலுக்காய் ஜெபித்தான் மோசே. வணங்காக்கழுத்துள்ளவர்களாகிய இஸ்ரவேலரை அழிக்க என்னை விட்டுவிடு. உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று மோசேக்குக் கடவுள் வாக்குத்தத்தம் கொடுத்தும் மோசே தைரியமாய் தேவசமுகத்தில் தன் மக்களுக்காய்ப் போராடியதை யாத்திராகமம் 32:30-32ல் காணலாம். மக்களை மன்னிக்கவேண்டும், இன்றேல் ஜீவ புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்று மன்றாடி, மன்றாட்டில் வெற்றியும் பெற்றான் மோசே. கடவுள் மக்களை அழிக்கவில்லை.
கோராகு பாவம் செய்தான். இஸ்ரவேலரில் பலரும் அவன் பக்கம் சேர்ந்தபடியால் கர்த்தர் அவர்களை அழிக்க முற்பட்டார். மறுபடியும் மோசே குறுக்கிட்டான். இப்பாவிகளுக்காய் ஜெபித்தான். மிகவும் இக்கட்டான நிலையில் ஜெபத்தின்மூலம் கடவுளிடம் செல்ல மோசே அறிந்திருந்தான். கர்த்தரின் கோபத்தைத் தணித்து மக்களை மீட்டுக் காப்பாற்ற மோசே கையாடிய வழி மன்றாட்டு. எண்ணாகமம் 16:22 இல் காணும் மோசே, ஆரோன் ஜெபத்தைப் பாருங்கள்.
மோசேயின் உடன் பிறந்த மீரியாமும் ஆரோனும் பெருமையால் மோசேக்கு விரோதமாய்ப் பேசினார்கள். குஷ்டரோகத்தினால் மிரியாமைக் கர்த்தர் சபித்ததினாலே அவளே இச்செயலுக்குத் தலைமை தாங்கியிருக்கவேண்டுமென்பது புலனாகிறது. ஆனால் இத்தண்டனையைக் குறித்து எவ்வளவும் மோசே மகிழவில்லை. மாறாக, அவளுக்காக மன்றாடியதிலிருந்து மோசேயின் நற்குணம் நமக்குப் புலப்படுகிறது. நீங்களே எண்ணாகமம் 12:9-15ன் வரலாற்றைப் படித்துப்பாருங்கள்.
கர்த்தருக்கு விரோதமாய் இஸ்ரவேல் மக்கள் முறுமுறுத்த சமயங்களிலெல்லாம் மோசே அவர்களுக்காய் மன்றாடினான். இந்நிகழ்ச்சிகள் மற்றொருவருக்காய் மன்றாடும் மோசேயின் பண்பை நமக்கு நன்கு வலியுறுத்துகிறது. மாராவின் தண்ணீர் கசந்து மக்களுக்குக் குடிக்க இயலாமற்போனபோது மக்கள் மோசேக்கு விரோதமாகவும், கடவுளுக்கு விரோதமாகவும் முறுமுறுத்தனர். ஆனால் மோசே மன்றாடினான். தண்ணீரின் கசப்பை மாற்றத்தக்கதாய் ஒரு மரத்தைக் காட்டினார் தேவன். (யாத்.15:23-26). ஆம். அநேக தருணங்களில் கசப்பை இனிப்பாக்குவது மன்றாட்டே !
எண்ணாகமம் 11:1-3ல் காண்கிறபடி தபேரா என்ற இடத்தில் முறுமுறுத்த மக்களுக்கு எதிராக தேவகோபம் பற்றி எரிந்தது. அங்கும் இடைப்பட்டான் மோசே. தேவகோபம் தணிந்தது.
கர்த்தர் மோசேயின் மன்றாட்டிற்குச் செவிசாய்த்தார். திட்டவட்டமாக ஜெபித்துக் கேட்டதைப் பெற்றுக்கொண்டான் மோசே. மோசே ஜெபித்தபோதெல்லாம் அவன் ஜெபம் கேட்டகப்பட்டது. எனினும் ஒரு சமயம் கடவுள் அவன் மன்றாட்டை ஏற்கவில்லை. வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட கானான் தேசத்திற்குள் செல்ல எண்ணிய மோசே, அத்தேசத்தை தூரத்தில் நின்று கண்ணளவில் மட்டும் காண அனுமதிக்கப்பட்டான். அதனுள் போக அனுமதிக்கப்படவில்லை. பவுலும் ஒருமுறை அவன் சரீரத்தில் முள் அகற்றப்படுமாறு ஜெபித்தான். அவன் விண்ணப்பம் கேட்கப்படவில்லையெனினும் தேவையான அனைத்துக் கிருபையும் அவனுக்குக் கிடைத்தது.
மோசே எப்படி ஜெபித்தான் என்பதை 90ம் சங்கீதம் விளக்கும். நாம் எப்படி ஜெபிப்பது என்பதை இச் சங்கீதம் காண்பிக்கிறது. இது அடக்க ஆராதனைகளில் நினைப்பதற்கு ஏற்றதேயெனினும் உயிருள்ளோருக்கே இக்கீதம் அத்தியாவசியமாகும். இதன் முழுக் கருத்தையும் உணர்ந்து படித்து பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து மரிக்க கற்றுக்கொள்வோம்.
நாங்களே ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும் (சங்.90:12,17).
விண்ணப்பித்த தீர்க்கதரிசி எலியா
தீர்க்கதரிசிகளில் மிகச் சிறந்தவனான எலியா கடவுளுக்கென அக்கினிபோல் பற்றி எரிந்தான். சில வேளைகளில், எலியாவின் செயல் ஒருவேளை அவன் இயற்கைக்குப் புறம்பானவனோ என்ற ஐயத்தை நம் மனதில் எழுப்பக்கூடும். எனினும் புதிய ஏற்பாடு இந்த ஐயத்தை நீக்கி அவனும் நம்மைப்போல மனிதனே என்று பறைசாற்றுகிறது. எனவே எலியா போன்ற விண்ணப்ப வீரர் பலர் தேவை.
பழைய ஏற்பாட்டில் எலியா நமக்கு அறிமுகமாகுமுன்னே ஜெபிக்க அறிந்துகொண்டவனாக காண்கிறோம். ஆகாப் மன்னனின் சிலை வணக்கத்திற்கு விரோதமாக அந்தரங்கத்தில் மன்றாடினான். தேவன் எலியாவின் மன்றாட்டிற்குச் செவிசாய்த்தபடியால் தேவன் விரோதிகளைத் தண்டிப்பார் எனத் திட்டவட்டமாய் நம்பினான். எலியா தேவனுடைய கட்டளையை மீறிய மக்கள் தண்டிக்கப்பட வேண்டிய காலமாயிருந்தபடியால் ஆகாபின் குற்றத்தைக் குறித்து நேரிடையாக எலியா ஆகாபிடம் பேசி அதற்கு நியாயமான தண்டனை மரணமே என்பதையும் வற்புறுத்தினான். மேலும் இதைக் கேட்டு நடுங்கிய மன்னனிடம் நாட்டில் மூன்றரை ஆண்டுகள் மழை இராது என பயமின்றி (1.இராஜா.17:1) எலியா இவ்வளவு திட்டவட்டமாய்க் கூறக் காரணம் என்ன? தேவன் தன் விண்ணப்பத்தைக் கேட்பார் என்ற உறுதியே அல்லவா?
கடவுள் முன்னிலையில் நின்றான் எலியா! யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியாவிடம் காபிரியேல் தூதன் தோன்றி உனக்கு ஒரு குமாரன் பிறப்பான் (லூக்.1:19) என்று உறுதியாகக் கூறினான். அதுபோலவே எலியாவும் தன் கடமையைச் சரிவரச் செய்தான். தூதனும் தீர்க்கதரிசியும் தேவனுடைய நாமம் மகிமைப்படத்தக்கதான பற்றுடையவராயும் தைரியமுடையவராயும் ஆயத்தமுடையவராயுமிருந்தனர். தாங்கள் அவருக்குக் கீழ்ப்படிவதையே விரும்பி எலியா ஜெபித்தான். மூன்றரை ஆண்டு காலம் தேசத்தில் மழை இல்லை (யாக்.5:17). எலியா பைத்தியக்காரனல்ல. கர்த்தரை அறிந்திருந்ததோடு மட்டுமின்றி அவர் விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கும் தேவன் என்பதையும் தாம் சொல்லியபடி செய்யும் சக்தி பெற்றவர் என்பதையும் அறிந்திருந்தான். இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் எலியாவின் ஜெபத்திற்கு இருந்தது என்பதற்கு மழையற்ற வறண்ட நிலமே சாட்சி. என் தேவன் யெகொவா என்ற அவனுடைய பொருளுக்கேற்ப முன் நின்றான். எனவேதான் யாக்கோபும் தன் நிருபத்தில் ஜெபத்தின் வலிமையைப் பாருங்கள் என்று கூறிவிட்டுத் தொடர்ந்து எலியாவைப்போல் ஜெபியுங்கள் என்றும் கூறுகிறான். மேலும் நீதிமானுடைய ஜெபத்திற்கு வல்லமையிருப்பதால் நீதிமான் ஜெபிக்கட்டும். கர்த்தர் பதிலளிப்பார் என்றும் கூறுகிறான்.
தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு இருதயத்தோடும் சிந்தையோடும் எலியா ஜெபித்தானேயொழிய அவனுடைய ஜெபம் வெறும் சொல்லோட்டமாய் விளையாட்டாய் இருக்கவில்லை. தேவன் அவனுக்குச் சத்தியபரராய் இருந்தார். ஜெபத்தின்மூலமாய் தேவன் உலகத்திற்கு தமது சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். தளர்ந்த ஜெபம் பயனற்றதால் பதில் கிடைக்கும்வரை ஊக்கமாய் ஜெபித்தான். ஜெபத்தின்மூலமே உலகத்தில் கடவுளை நிரூபிக்கமுடியுமென்றும் நம்பினான். தேவனை அவமதித்துக் கீழ்ப்படியாத மக்கள் தண்டிக்கப்படவும் கடவுளுடைய பிள்ளைகளின் வல்லமையை உலகம் அறியும்படி செய்யவேண்டுமென்றும் ஜெபித்தான்.
கேரீத் ஆற்றண்டையில் கர்த்தரின் கட்டளைப்படி எலியா ஒளிந்துகொண்டிருக்கும் சமயம் ஜெபத்தில் புதிய அனுபவங்களைப் பெற்றான். ஆகாப் அவனைத் தேடும்போது அவன் ஜெபித்துக்கொண்டிருந்தான். சாறிபாத் ஊருக்கு எலியா செல்லும்முன்னர் அவனுக்கு உணவுகொடுக்க அங்கொரு ஏழை விதவையை ஏற்படுத்தியிருந்தார் தேவன். சாறிபாத்திற்குச் சென்ற எலியாவிற்கு விதவை அன்புடன் உதவினது உண்மையெனினும் விதவைக்கு எலியா அதிக உதவியாயிருந்தான் (லூக்.4:26). அதற்குக் கருவியாய் அமைந்தது ஜெபமே. எலியா அங்கிருந்தபடியால் தாயும் மகனும் பட்டினியால் வாடவில்லை. அந்த விதவையின் ஒரே மகன் வியாதியால் பீடிக்கப்பட்டு இறந்தான். ஆனாலும் எலியா அங்கிருந்தபடியால் தேவனிடத்தில் மன்றாடினான். பிள்ளையும் உயிர்பெற்றது. தன் மகனை இழந்ததைவிட வேறு பேரிழப்பு ஒரு விதவைக்கு இருக்கமுடியாது. எனினும் அந்த இக்கட்டான நேரத்திலும் தேவனையே நோக்கிப் பார்த்தான் எலியா. ஜீவனுக்கும் மரணத்திற்கும் அதிபதியாகிய கர்த்தர் மகனை உயிர்ப்பிக்கும்படி தன் அறைக்குச் சென்று மன்றாடினான் எலியா. மரித்தவனுக்கு உயிர் மீண்டும் கொடுக்க கடவுளால் முடியுமென்று நம்பினான். கர்த்தர் செவிகொடுத்தார். தாம் அனுப்பியவனே எலியா என்பதையும் நிரூபித்துத் தம் வாக்கையும் மெய்யாக்கினார். இன்றும் மன்றாட்டைக் கேட்டு பதிலளிக்க தாம் உயிருள்ளவராய் இருப்பதைத் தம் வார்த்தையின்மூலம் மெய்யாக்கினார். இந்த அற்புத நிகழ்ச்சியைக் குறித்து 1.இராஜாக்கள் 17:17-24ல் வாசித்துப் பாருங்கள்.
இவற்றையெல்லாம்விட பர்வத நிகழ்ச்சியே ஜெபத்தின் வலிமையை அதிகமாய் விளக்குவதாய் உள்ளது. ஆகாப் மூலம் சிலை வணக்கம் வலியுற்றது. பாகாலை மக்கள் பலர் வணங்கியதால் பாகால் உண்மையான தேவனா? யெகோவா உண்மையான தேவனா? என்ற போட்டியும் எழுந்தது. சோதித்து உண்மையை அறிய இரு சாரரும் முன்வந்தனர். பாகாலுக்குப் பலி செலுத்தி நாளெல்லாம் தங்கள் உடலையும் வருத்திக்கொண்டு காத்திருந்தனர் பாகால் தீர்க்கதரிசிகள். பாகால் செவிகொடுக்கவில்லை. எலியா இறுதியில் தேவனுக்குப் பலி செலுத்தமுன்வந்தான். கற்களால் பலிபீடம் கட்டி, பலிக்கான விறகுகளை அடுக்கி அதன்மேல் காளையை வைத்து பலிபீடத்தைச் செம்மையாக்கி தன்னிடம் விந்தை ஒன்றுமில்லை என்பதை விளக்கிய பின்னர் பலீபீடத்தையும், பலிப்பொருளையும் நன்கு நனைத்து தேவனை நோக்கி சுருக்கமாய் விண்ணப்பம்பண்ணினான். 1.இராஜாக்கள் 18:36-37ல் அவன் மன்றாட்டை வாசித்துப் பாருங்கள். எலியாவின் விண்ணப்பத்திற்கு உத்தரவாக உடனே அக்கினி புறப்பட்டு வந்து பலியை மட்டுமின்றி விறகுகளையும், கல்லையும், நீரையும்கூடப் பட்சித்தது. கர்த்தர்தாமே மெய்யான கடவுள் என்பதை நிரூபித்தார்.
எலியா எப்போதும்போல கடவுளோடு நேரிடைத் தொடர்புகொண்டிருந்தான். இஸ்ரவேல் மக்களுக்குக் கடவுள் தம்மை வெளிப்படுத்தவேண்டும் என்று மன்றாடியதற்கேற்ப தம்மைக் கர்த்தர் வெளிப்படுத்தினதுமன்றித் தாம் அனுப்பியவனே எலியா என்பதையும் உறுதிப்படுத்தினார். எலியாவைப்போல நாமும் ஜெபித்தால் கடவுள் வல்லமையாய்ச் செயல்படுவதை நாம் காணமுடியும். நாம் அறைகுறையாய்த் தளர்ந்து ஜெபிப்பதாலேயே கடவுளும் குறைந்த வல்லமையுடன் செயல்படுகிறார்.
ஆகாபுக்கு ஒளிந்து வாழ்ந்த எலியாவிடம் ஆகாபைச் சந்திக்கும்படி கடவுள் கூறுகிறார். பாகால் தெய்வமல்ல, தாமே உண்மைத் தெய்வம் என்பதை நிரூபித்த கர்த்தர் பூமியில் மழைய அனுப்புவதாகவும் எலியாவிடம் கூறுகிறார். குறிப்பிட்ட நாள் மாலை வரை மழை பெய்யவில்லை. எனினும் எலியா மனந்தளரவில்லை. கடவுள் தாம் சொன்னதைச் செய்வார் என்று நம்பினான். அரசனை உணவருந்தச்சொல்லி, மலையின்மீது ஏறி ஜெபித்தான். தன் வேலைக்காரனை ஏழுமுறை அனுப்பிச் சமுத்திர முகமாய் ஏதேனும் தெரிகிறதா என்று பார்க்கச் சொன்னான். வேலைக்காரன் ஆறுமுறை சென்றான். ஏதும் மாற்றம் இல்லை. எனினும் ஏழாம் முறை ஒரு மனிதனின் உள்ளங்கையளவு மேகம் சமுத்திரத்திலிருந்து எழும்பவதைக் கண்டான். எலியாவின் கட்டளைப்படி உணவருந்திக் கொண்டிருந்த அரசனுக்கு வேலையாள் மூலம் மழை உம்மைத் தடைபண்ணுமுன்னர் இரதத்திலேறி யெஸ்ரயேலுக்குப்போம் என்று சொல்லியனுப்பினான். அவன்போகும் வழியில் ஆகாயம் கறுத்துப் பெரும்மழை பொழிந்தது. 1.இராஜாக்கள் 18:41-46 இலும் யாக்கோபு 5:18 இலும் இந்நிகழ்சியை வாசித்துப் பாருங்கள்.
ஊக்கமான விண்ணப்பம் தகுந்த பலனைக் கொடுக்கும். எலியா மழைக்காக ஜெபித்தான். உள்ளங்கையளவு மேகம் தென்பட்டதுமே தன் விண்ணப்பம் கேட்டதாக உணர்ந்தான் எலியா. எலியாவின் ஊக்கமான ஜெபத்தைப்பற்றிக் கேள்விப்பட்ட பின்னர் நம் விண்ணப்பத்தைக் குறித்து நாம் வெட்கப்படுகிறோமா? எலியா ஜெபித்தான். நடந்தது என்ன? மழை பெய்தது. அக்கினி பட்சித்தது. மக்கள் கர்த்தரே உண்மையான கடவுள் என்று சொல்லித் தங்கள் தீய வழிகளினின்றும் மாறத்தக்கதாய் கடவுள் தம்மைத் தம் விரோதிகளுக்கு வெளிப்படுத்துகிறார்.
மன்னனைப்போல மன்றாடிய எலியாவின் விண்ணப்பம் அக்கினிமயமாய் பற்றியெரிந்தது. பிரதான ஆசாரியன் தூபம் போன்றுமிருந்தது. அதுமட்டுமன்றி விண்ணப்பிக்கும்போது வல்லமையால் தரிப்பிக்கவும்பட்டான். எனவேதான் அக்கினி இரதமும் அக்கினிக்குதிரைகளும் எலிசாவையும், எலியாவையும் பிரித்துச் சுழல் காற்றினூடே எலியா மேகத்தில் எடுத்துக்கொள்ளப்படும்போது, எலிசா என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான். ஏன்? இரதமும் குதிரைவீரர்களும் சாதிக்கக்கூடியதைவிடப் பன்மடங்கு தன் முழங்காலில் சாதித்துக்காட்டிய வீரன் எலியா. ஆம். ஜெபம் எதையும், எப்படியும் மாற்றும்! மோட்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். ஜெபம் ஜெயம்.
எக்காலத்திலும் விண்ணப்பத்தில் உறுதியாய்த் தரித்திருந்த எலியாவுடன் தேவனுடைய பிரசன்னம் இருந்தது. இன்று அத்தகையோர் இருக்கின்றனரா? நம் சபைத் தலைவர்கள் வல்லமையுடள் அக்கினி பற்றி எரியத்தக்கதாய் ஜெபிக்கின்றனரா? அவர்கள் விண்ணப்பம் மணம் பொருந்தியதா?
பாகால் தீர்க்கதரிசிகளிடம் எலியா கூறியதை நினைத்துப் பாருங்கள். விண்ணப்பதற்கப் பதில் கொடுப்பவரே உண்மையான தெய்வம் என்று அறைகூவினான். தேவன் ஜீவனுள்ளவரா? வேதாகமம் உண்மையான கர்த்தருடைய வார்த்தையா என்று தர்க்கவாதம் செய்வோர் பலர் இந்நாளில் இருக்கின்றனர். அவர்களுக்கு நம் பதில் என்ன? தேவனிடத்தில் கடுகளவும் குறைவில்லை. நம் ஜெபக்குறைவே நம் தோல்விக்கு காரணம். விண்ணப்பத்திற்கு தேவன் பதிலளிக்கிறார் என்பதை நாம் நிரூபித்து பரிசுத்த வேதாகமம் அவருடைய வார்த்தை என்பதையும் மெய்ப்பிக்கவேண்டும். எலியா போன்றோர் இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமாய் பதிலிறக்க முடியும். நம் சபைகளில் எலியாக்கள் எங்கே? யாக்கோபு தன் நிருபத்தில் எலியா நம்மைப்போல பாடுள்ள மனுஷனாயிருந்தான் என்று கூறினான். ஆனால் நாம் அவனைப்போலக் கருத்தாய் ஜெபிக்கிறோமா? பாகால் தீர்க்கதரிசிகளுக்கு அவன் கொடுத்த அறைகூவலை அச்சமயத்தில் கருத்துடன் அமைதியாய் அவன் ஜெபித்ததையும் பாருங்கள்.
எனவே யாக்கோபு, நாமும் எலியாவைப்போல கருத்தாய் ஜெபிக்கவேண்டுமென்று கூறுகிறான். கருத்தாய் ஜெபித்தால் எலியா கண்ட பலனை நாமும் காணுவோம். உலகில் அநேகர் பொருளற்ற வார்த்தைகளால் வெளிவேடத்திற்காய் கருத்தின்றி ஜெபிப்பதால் திட்டவட்டமான பலனை எதிர்பார்ப்பதுமில்லை. பலன் கிடைப்பதுமில்லை.
எலியா ஜெபித்ததுபோல கருத்துடன் ஜெபிக்க பரிசுத்த வேதாகமம் காட்டும் தேவன் பேரில் தீர்க்கமான நம்பிக்கை நமக்கு வேண்டும். அவர் சொல்லும்படி செயல்படவேண்டும். விண்ணப்பம் இருதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கருத்தற்ற ஜெபம் பயனற்றதெனினும் பயன் தராத ஜெபங்களே நம் நடுவில் பெருகியுள்ளன.
ஜெபித்த மன்னன் எசேக்கியா
எசேக்கியா மன்னன் காலத்தில் ஏசாயாவும் வாழ்ந்தான். இவர்கள் காலத்தில் இஸ்ரவேல் மக்களிடையே உண்மையான மார்க்க எழுப்புதல் உண்டானதற்கு அடிப்படைக் காரணம் ஜெபமே. யூதாவை அரசாண்ட எசேக்கியா மன்னன் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஜெபிக்கும் தலைவனாக சகல விதத்திலும் ஞானத்தோடும், வல்லமையோடும் வாழ்ந்தான். வெண் அங்கி தரித்துப் பொன்முடி அணிந்து சேனைத் தலைவனாக மட்டுமன்றி ஒரு கவிஞனாகவும், கடவுளைவிட்டு அலைந்து திரிந்த இஸ்ரவேலரைக் கடவுள் பக்கமாய்த் திருப்பும் தலைவனாகவும் விளங்கினான். இந்த நிலை இவனுக்கு எப்படிக் கிடைத்தது?
கர்த்தருடைய பாhவைக்குச் செம்மையானதைச் செய்த சிலரில் இவன் எப்படி ஒருவனானான்? அவனுடைய பெற்றோர், பாட்டன்மார் கடவுள் பக்தியுள்ளவராயிருந்தனரா? இல்லை. இவனுடைய மூதாதையர் கடவுள் பயமற்றவர். பெற்றோர் தெய்வ பயத்தை இவனுக்கு ஊட்டவில்லை. அவர்கள் மக்களைக் கடவுளின் முன்னிலையினின்று பிரிந்துபோகச் செய்தனர். எனினும் எசேக்கியா கடவுளுக்குப் பயந்து வாழ்ந்தான். ஏசாயா அவனுடைய தோழனாயிருந்தான். அவன் எசேக்கியாவுக்கு அறிவுறுத்தி நன்னெறிப்படுத்தும் நண்பனாயுமிருந்தான்.
பஸ்காவைக் கொண்டாடும்படிக்கு எசேக்கியா நல்ல ஆயத்தங்களைச் செய்தான். எதிர்பார்த்ததற்கு மேலாக மக்கள் திரண்டு வந்தனர். பண்டிகையில் பங்கெடுக்க அநேகர் திரண்டு வந்தனர். பண்டிகையில் பங்கெடுக்க அநேகர் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளாதிருந்தார்களெனினும் பஸ்காவைப் புசிக்க விரும்பினார்கள். லேவியர் அவர்களுக்காகப் பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்துக்கொடுத்தனர். வெளித்தோற்றத்தைவிட உள்ளான சுத்தமே மேலானது என்பதை அறிந்திருந்த எசேக்கியா, தங்கள் இருதயங்களில் தேவனைத் தேடும்படிக்கு நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ப சுத்தம் அடையாதிருந்தாலும் தேவன் அவர்களை மன்னிக்கவேண்டுமென விண்ணப்பித்தான். இதை 2.நாளாகமம் 30:17.20ல் உள்ள பகுதியில் காணலாம். கடவுளுக்குப் பயந்து, ஜெபிக்கும் பழக்கமுடைய மன்னனின் விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டு, சத்தமில்லாமல் பஸ்காவை ஆசரித்தவர்களையும் அவர் மன்னித்தார்.
2.நாளாகமம் 32:7-8ல் நாம் காண்கிறபடி எசேக்கியா அசீரிய மன்னனைக் குறித்துப் பயப்படாமல் தன் படை வீரரை நோக்கி ஆசீரிய மன்னன் மனித பலத்தில் மட்டுமே போரிடுவான் என்று கூறும்பொழுது தனக்குத் தேவனுடைய உதவி உண்டு என்ற நிச்சயம் உடையவனாய் இருந்ததையும் காண்கிறோம். விரோதிகளான சீரியர் படையெடுத்து வந்தனர். எசேக்கியாவோ ஜெபித்தான். பகைவர் நெருங்கி வரும்போது தன் படைவீரரின் பலத்தை நம்பாத எசேக்கியா தன் தேவன் சர்வ வல்லமையுள்ளவர் என்பதையே நம்பினான், ஜெபித்தான். பண்டைக் காலத்தில் மக்களை வழிநடத்திய மன்னன் கடவுள் பயமுடையவராய் ஜெபித்தபொழுது மக்கள் பயப்படத் தேவையே இருக்கவில்லை. ஒரு சமயம் அசீரிய படை எருசலேமை முற்றுகையிட்டது. அச்சமயம் யூத மக்கள் தோல்வியுற்று கைதிகளாய்ச் சிறைபிடிக்கப்பட்டு விடுவாரோ என்ற ஐயமும் எழுந்தது. கர்த்தருக்கு விரோதமாகவும், எசேக்கியா மன்னனுக்கு விரோதமாகவும், எருசலேமின் குடிகள் கேட்கத்தக்கதாய் சீரியர் தீமையான வார்த்தைகளைப் பேசினர். தன் விசுவாசம் சோதிக்கப்பட்ட இந்நேரத்தில் எசேக்கியா என்ன செய்தான். ஏசாயாவுடன் ஆலயத்திற்குச் சென்று ஜெபித்தான். இக்கட்டு நேரத்தில் ஒரே உதவி கடவுளே என்பதைத் திட்டவட்டமாய் அறிந்திருந்தான் எசேக்கியா. மேலும் இஸ்ரவேலரை, கடவுள் நம்பிக்கையற்ற துன்மார்க்கமான அசீரியர் கைக்குத் தப்புவிக்க வல்லவர் தேவன் ஒருவரே என்று அறிந்திருந்தான்.
பட்டணத்தை முற்றுகையிட்டிருந்த அசீரியப் படைகள் எத்தியோப்பியா மன்னனுடன் உடனடியாக போரிடப்போகவேண்டியதாயிருந்தது. எசேக்கியாவின் விண்ணப்பத்திற்கு அதிசயமாய்ப் பதில் கிடைத்தது. அசீரியப் படைத்தலைவனிடமிருந்து தேவ தூஷணைகூடிய ஒரு கடிதம் வந்தது. எசேக்கியா அதைப் படித்து முடித்ததும் நேரே ஆலயத்திற்குச் சென்று தேவனுடைய பிரசன்னத்தின்முன் கடிதத்தை விரித்து வைத்து முறையிட்டான். அவன்முறையீட்டை 2.இராஜாக்கள் 19:15-19ல் படித்து இன்புறுங்கள். உடனடியாக அவன் விண்ணப்பம் கேட்கப்பட்டது. கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பி எசேக்கியா எதற்கும் கலங்கவேண்டியதில்லை என்று தேற்றினது மட்டுமின்றித் தம் தூதனையனுப்பி 1,85,000 அசீரிய மக்களைக் கொன்றும் போட்டார். எசேக்கியா கடவுளின் பிள்ளை என்பது நிரூபிக்கப்பட்டதோடு கர்த்தருடைய நாமமும் மகிமைப்பட்டது. எசேக்கியாவின் குடிகளும் காப்பாற்றப்பட்டனர். மன்னனும் தீர்க்கதரிசியும் இணைந்து ஏறெடுத்த விண்ணப்பத்திற்குப் பதிலாக தூதர்கள் இஸ்ரவேலரைக் காப்பாற்றி அவர்களுடைய பகைவரைக் கொன்று அழித்தனர்.
சிலை வணக்கத்திற்கு அடிமைகளாயிருந்த மக்களைக் கடவுள் பக்கம் திருப்ப எசேக்கியா உபயோகித்த கருவி ஜெபமே. ஜெபத்தின்மூலமே அவனுடைய பகைவரும் அழிக்கப்பட்டுக் குடிமக்களும் காப்பாற்றப்பட்டனர். இந்நிலையில் ஒரு புதிய சூழ்நிலை உருவாகியது. எசேக்கியா வியாதிப்பட்டான். 2.இராஜாக்கள் 20:1ல் நாம் காண்கிறபடி தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவரிடத்தில் வந்து நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். நீர் பிழைக்கமாட்டீர். நீர் மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். இது கர்த்தருடைய செய்தியாயிருந்தபடியால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பதை எசேக்கியா அறிந்திருந்தான். ஜெபம் கர்த்தருடைய எண்ணத்தை மாற்ற இயலுமா? மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒருவனை மீட்க ஜெபத்திற்கு வல்லமையுண்டா? தீராத வியாதிகளைத் தீர்க்க ஜெபம் பயன்படுமா? என்றெல்லாம் மனதில் எசேக்கியா குழப்பினாலும், இத்தகைய தருணங்களில் எங்கு செல்லவேண்டும், யாரிடம் முறையிடவேண்டுமென அறிந்திருந்தான். ஆகவே ஏசாயா மூலம் செய்தியனுப்பிய கடவுளிடமே ஜெபித்தான். ஓர் அவிசுவாசியைப்போல அவன் அச்சமயம் மனம் தளரவில்லை. கட்டளையிட்டவரே அதை மாற்றவும்கூடும் என்று நம்பியதால், ஆ கர்த்தாவே நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று அழுது விண்ணப்பம்பண்ணினான் (2.இராஜா.20:3). கடவுளுக்குத் தன்னைப்பற்றி நினைப்பூட்டினானேயொழிய சுயநீதியாய் ஜெபித்ததான் என நாம் கருதக்கூடாது. தாவீதும் இப்படி ஒருமுறை ஜெபித்தான் என்பதற்குச் சங்கீதம் 26:1 சான்று பகரும். இயேசு கிறிஸ்துவும் இத்தகையதோர் விண்ணப்பம் செய்தார் என்பதை யோவான் 17:4ல் காணலாம். தனக்குச் சுகம் கிடைப்பதாயின் அது கர்த்தரிடத்திலிருந்தே வரும் என்பதை எசேக்கியா உறுதியாய் நம்பினான்.
எசேக்கியா ஜெபித்து முடித்தான். மன்னனிடம் கடவுளின் செய்தியைக் கூறிவிட்டுப் பாதி வழி சென்றிருந்த ஏசாயாவிடம் மீண்டும் கர்த்தர் பேசினானர். எசேக்கியாவிடம் போய் அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டது என்றும் அவனுடைய ஆயுசு நாட்கள் இன்னும் பதினைந்து ஆண்டுகள் நீடிக்கப்பட்டிருக்கிறதென்றும், இன்னும் மூன்று தினங்களில் அவன் ஆலயத்தில் தொழத்தக்க பெலனை அடைந்துவிடுவான் என்று கூறச்சொன்னார். மேலும் அசீரிய மன்னனிடமிருந்து எருசலேமைக் காப்பாற்றுவதாகவும் உறுதிகொடுத்தார் (2.இராஜா.20:4-6).
கர்த்தர் சில வேளைகளில் தம் விருப்பத்தை மாற்றியும் ஜெபத்திற்குப் பதில் கொடுக்கிறார். அத்தகைய விண்ணப்பங்களை வரவேற்கவும் செய்கிறார். எசேக்கியா ஜெபித்ததால் கர்த்தர் தன் விருப்பத்தை மாற்றி அவனுடைய ஆயுசைக் கூட்டினார். இது குறித்து ஏசாயாவும் மனமகிழ்ந்தான். இச்சூழ்நிலையில் கடவுள் தம் விருப்பத்தை மாற்றியதற்குத் தகுந்த காரணங்களுண்டு. எசேக்கியா கடவுளின் உத்தம ஊழியனாயிருந்து கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்காகச் செயல்ப்பட்டவன். அவன் கண்ணீரோடு ஏறெடுத்த விண்ணப்பத்திற்குக் கடவுள் பெருக்கமாய்ப் பதிலளித்தார் என்பது சாலப் பொருந்தும். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபங்களுக்குப் பதில் தர வாஞ்சையுள்ளவராயிருக்கிறார்.
ஜீவனும் சுகமும் கொடுத்து நோயையும் சாவையும் மேற்கொள்ளத்தக்கது விண்ணப்பம். எசேக்கியா கேட்டதற்கும் அதிகமாய்க் கடவுள் அவனுக்குக் கொடுத்தார். தனக்கு ஜீவனை மட்டும் வேண்டி நின்றவனுக்கு அதை அளித்ததோடு அவன் நாட்டிற்கும் மக்களுக்கும் பகைவரிடமிருந்து பாதுகாப்பையும் அளித்தார். எபேசியர் 3:20-21 வாசிக்க.
வியாதியிலிருந்து சுகம் கொடுக்கும் கர்த்தர் வழி வகையை கையாளுகிறார். எசேக்கியா உயிர் பெற்றுத் திரும்பியது கர்த்தருடைய கிருபையே எனினும் ஏசாயாவிற்கும் அதில் ஒரு பங்குண்டு. அவனோ எசேக்கியாவின் மருத்துவனாயிருந்தான். அத்திப்பழ அடையினால் பிளவைமேல் பற்றுப்போடும்படி சேவகர்களுக்கு ஏசாயா கட்டளை கொடுத்தான். அதன்படி எசேக்கியா குணமடைந்தான். இது அற்புதமான செயலே! எனினும் கடவுள் எசேக்கியாவிற்குச் சுகமளிக்கும் வழிவகைகளை வகுத்துத் தந்தார். நம் நம்பிக்கை மருந்தின் மேலன்றி கடவுள் மேலிருக்கவேண்டுமென்பதே முக்கியமானதாகும். அத்திப்பழ அடைகளுக்கு மட்டும் பிளவையைக் குணப்படுத்தும் ஆற்றல் இருக்கவில்லை. எனினும் மன்னனின் மாறாத நம்பிக்கைக்கு இது ஓர் உரைக்கல்லாய் அமைந்தது எனலாம். இந்நிலையிலும் அதிகமான ஜெபம் தேவைப்பட்டது. தான் குணமடைவதைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை ஏசாயாவிடம் மன்னன் கேட்டான்.
எசேக்கியாவின் தகப்பனாகிய ஆகாஸ் ஒரு சூரிய கடிகாரம் வைத்திருந்தான். அதில் அடையாளமாக பத்து பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, அல்லது பத்துப் பாகை பின்னிட்டுத் திருப்பவேண்டுமோ என்று ஏசாயா மன்னனிடம் கேட்டான். எசேக்கியா மறுமொழியாகப் பத்துப் பாகை முன்னிட்டுப்போவது எளிதான செயல். எனவே பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான். அப்படியே எசேக்கியாவின் விருப்பத்தை ஏசாயா கடவுளிடம் தெரிவித்தபோது சூரிய கடிகாரத்தில் பாகைக்குப் பாகை முன் போன சாயை பத்து பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார் கடவுள். தன் விண்ணப்பத்தைக் கேட்ட எசேக்கியா கடவுளுக்குத் துதி செலுத்தினான்.
கீழ்க்காணும் நான்கு குறிப்புகளையும் நாம் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
(1) கடவுள் விண்ணப்பத்தைக் கேட்கிறார்
(2) கடவுள் விண்ணப்பத்தில் கருத்துடையவர்
(3) கடவுள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கிறார்
(4) கடவுள் விண்ணப்பமூலம் விடுதலையளிக்கிறார்
கடவுளுடைய பிள்ளைகளை அடிமைப்படுத்தியிருக்கும் சகல கட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவிக்க வல்லது ஜெபம்.
இனிய வாழ்க்கையை நெடுநாள் துய்க்க விரும்பிய எசேக்கியாவின் விருப்பத்திற்குக் குறுக்கே நின்றது கடவுளின் கட்டளை. ஆனால் விசுவாசத்துடன் அழுது ஜெபித்த மன்னனின் ஊக்கமான ஜெபம் கேட்கப்பட்டது. உருக்கமான மன்றாட்டைக் கண்ட கடவுளும் தம் கட்டளையை மாற்றினார். ஜெபத்தின் வல்லமையையும் ஆண்டவருடைய மகிமையைiயும் பறைசாற்றும் உன்னத மனிதனாய் எசேக்கியா வாழ்ந்தான்.
எசேக்கியாவைப்போலவே பவுலும் ஜெபவீரனாயிருந்தான் அன்றோ! அவன் பொருளற்ற வார்த்தைகளைத் தன் மன்றாட்டில் உதிர்க்கவில்லை. பாவத்தையும் சாத்தானையும் எதிர்த்துப் போராடி ஜெபித்தான். ரோமர் 15:32 ல் நாம் காண்கிறபடி தான் மட்டுமன்றிப் பிற விசுவாசிகளையும் ஜெபத்தில் முழு இருதயத்தோடும் தரித்திருந்து போராட அழைத்தான். கொலோசேயர் 4:12 ல் பவுலைப்போல எப்பாப்பிராத்துவும் ஊக்கமாய் ஜெபித்தான் என்று காண்கிறோம். கடவுளின் சித்தத்தை விசுவாசிகள் அறிவதற்காக இம் மனிதர் ஜெபத்தில் போராடினார்கள். அதனால் அக்கால சபை பரிசுத்தமும் வல்லமையுமுடையதாயிருந்தது.
எசேக்கியா தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தான். ஜெபித்தபோது பல இக்கட்டுக்களை எதிர்த்துப் போராடினான். அவ்விதமே நம்முடைய ஜெபங்களும் ஆண்டவர் மகிமைப்பட்டு வெற்றி சிறக்க வேண்டுமென இருதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கவேண்டும். ஜெபத்தின்மூலம் கிடைக்கக்கூடிய வல்லமையையும் ஆசீர்வாதத்தையும் முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய மக்கள் இந்நாளில் தேவை.
இவ்விதமாய் கடவுளை முற்றிலும் சார்ந்திருக்கும் ஓர் ஆத்துமாவையும் காணாததாலே ஏசாயா வருந்தினான். மேலும் அநேகர் பொருளற்ற முறையில் எளிதாக ஜெபித்தனரேயொழிய ஒருவரும் முழு இருதயத்தோடும் ஜெபிக்கவில்லை. ஆண்டவருடைய ஊழியத்திலே வல்லமையை வெளிப்படுத்தக்கத்தக முறையில் ஒருவரும் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தவில்லை. வெறும் வார்த்தைகளடங்கிய ஜெபம் இக்கட்டினை மேற்கொள்ள உதவாது. மேலும் அத்தகையதோர் சிறந்த பலனையும் பெறாமல் ஆண்டவருக்கென வெற்றி சிறக்கவும் இயலாதவராகின்றனர்.
ஜெபித்த சீர்திருத்தவாதி எஸ்றா
தம் மக்களைத் தம் பக்கமாய்த் திருப்புவதற்குக் கடவுள் பயன்படுத்திய முக்கிய மனிதர்களுள் ஒருவன் எஸ்றா. இவன் ஜெபிக்கும் பழக்கமுடையவனென பழைய ஏற்பாடு கூறுகிறது. இக்கட்டு நேரத்தில் ஜெபத்தில் போராடி நன்மையைப் பெற்றவன். பெர்சிய மன்னனின் ஆதரவைப் பெற்றானென்பது ஆச்சரியமானதென்றாலும் உண்மையான செயலேயாம். பாபிலோனிலிருந்து எஸ்றா எருசலேமுக்குச் சென்றான். அங்கு சென்று தலைவர்களுடன் அளவளாவிய எஸ்றாவுக்குத் துயரச் செய்தியே காத்திருந்தது. கடவுளின் கட்டளையை மீறி இஸ்ரவேலர் தங்களைச் சூழ வாழ்ந்த பிற இனத்தவருடன் கலப்பு மணம் செய்தனர். அதோடு நில்லாது சிலை வணக்கத்தையும் பிற தீயச் செயல்களையும் பின்பற்றினர். இஸ்ரவேல் மக்களை வழிநடத்திய தலைவர்களே இப் பாவங்களுக்குத் தலைவர்களாயிருந்தனர் என்பது வருந்தக்கூடிய செயலாகும்.
உலக மக்களோடு இம்முறையில் தொடர்புகொண்டிருந்த செயலைக் குறித்து எஸ்றா வருந்தினான். அவருடைய பிள்ளைகள் தமக்கெனப் பிரிக்கப்பட்டவராய், எக்காலத்தும் தூய்மையாக இருக்கவேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார். இக்காரணத்தாலேயே கடவுள் கானான் தேசத்தில் தம் மக்களைக் குடியேற்றி எவ்வகையிலும் அவர்களைச் சூழ்ந்திருந்த பிற மதத்தவருடன் தொடர்புகொள்ளக்கூடாது எனத் திட்டவட்டமாய்க் கூறியிருந்தார். இக்கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் மக்கள் வாழ்ந்ததால் கடவுளுக்கென ஒன்றும் சாதிக்க இயலவில்லை. லேவியரும், மன்னரும், ஆசாரியரும், மக்களும் எல்லா தரத்தினரும் பிற மத்தினருடன் தொடர்புகொண்டு அவர்களுடைய பெண்களைத் தங்களுக்குக் கொண்ட காரணத்தால் கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்திருந்த அடிப்படைக் கட்டளைகளுக்குள் ஒன்றை மீறினர். இதைக் குறித்து என்ன செய்வது என்பதே கடவுளுடைய பிள்ளையாகிய எஸ்றாவின் சிக்கலாகும். கடவுளின் பிள்ளைகள் மீண்டும் தம்மிடம் திரும்புவது அசாத்தியமாகிவிட்டது. நேரிடையான உபதேசத்தால் இப்பாவ நிலையிலிருந்து மக்களை மீட்க எஸ்றா முயற்சிக்கவில்லை. மக்கள் வெகுண்டு அவனைப் பட்டணத்திலிருந்து வெளியேற்றிவிடுவாராதலால் எப்படி இந்தத் தொடர்பை அறுத்து இஸ்ரவேலரைப் பிரித்தெடுப்பது என்பதே எஸ்றாவிற்கு பெரும் பிரச்சனையாயிற்று.
இச்சூழ்நிலையை உணர்ந்தான் எஸ்றா. இப்பாவம் பெரியதன்றோ, இதனால் எதுவும் பாதிக்கப்படவில்லையென்றோ, போலியாக நடிக்கவில்லை எஸ்றா. குருட்டாட்டமாய்க் கடவுளை எஸ்றா பின்பற்றவில்லை (ஏசா.42:19). இப்பாவத்தின் அகோரத்தை எஸ்றா முற்றிலும் உணர்ந்தான். இன்றைய நம் சபைகளில் கர்த்தருடைய பார்வையிலே பெரிதாகக் காணப்படக்கூடிய பாவத்தைக் குறித்து உணர்ந்து வழிநடத்தக்கூடிய தலைவர்கள் தேவை.
இந்தப் பயங்கர நிலைiயைக் குறித்து வருந்திய எஸ்றா தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தலைவிரிகோலமாய்த் துக்கித்துப் புலம்பினான். மக்களின் பாவத்தைக் கண்டு கலங்கி புரண்டான். உடனே கடவுளுடைய சமூகத்தில் மன்றாடி மக்களுடைய பாவங்களை அறிக்கையிட்டான், இரக்கங்காட்டும்படி ஜெபித்தான். இத்தகைய சமயங்களில் எதிர்பாராத வகையில் செயல்பட்டு உதவக்கூடியவர் மன்றாட்டைக் கேட்கும் தேவனே என்பதை எஸ்றா நம்பியிருந்தான். பலன்தரக்கூடியதென அறிந்திருந்த உபவாசத்துடன் நொறுங்குண்ட ஆத்துமாவில் அழுது ஜெபித்தான். ஜெபமே ஜெயமன்றோ! இது ஒன்றே தேவகோபாக்கினையைத் தவிர்க்கவல்லது என்பது அவனுக்குத் தெரியும். அவன் உள்ளம் உடைந்தவனாய் ஜெபித்தான். அவன் இப்படி அழுது ஜெபிக்கும் சமயம் அவனுடைய மன்றாட்டுக்குப் பதிலளிக்கத் தேவன் செயல்பட்டார். ஒரு கூட்டம் அவனைச் சூழ்ந்து அவனுடன் அழ ஆரம்பித்தது. எஸ்றாவின் மன்றாட்டைக் கடவுள் கேட்டு செயல்படுகிறார் (எஸ்.10:1). கடவுள் ஒருவரே இத்தகைய சூழ்நிலையில் செயலாற்ற முடியும். கடவுளுக்கு எதுவுமே நம்பிக்கையற்றதில்லையாதலால் ஒருவன் மன்றாடும்போது எந்தச் சூழ்நிலையுமே நம்பிக்கையற்றதாகிறதில்லை. கடவுளிடத்து மட்டுமே மன்றாடினால் உண்மையான வேண்டுதல் பலனளிக்கும். எஸ்றா மக்களுக்காய் ஜெபித்தான். அவனுக்கும் அது பயனளித்திருக்கும். அத்துடன் அவன் ஜெபத்தைக் கேட்டுக் கர்த்தர் கிரியை செய்தார்.
மக்களனைவரும் கர்த்தரிடத்தில் திரும்பினர். பாவங்களை ஆச்சரியமாய் ஒப்புரவாக்கினர். இது எப்படி நடந்தது? எஸ்றா அழுது ஜெபித்ததாலேயே அல்லவா? இஸ்ரவேலின் மூப்பர் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுச் சரிப்படுத்த வேண்டியவற்றைச் சரிப்படுத்தினதோடு இம்முயற்சியில் எஸ்றாவுக்குத் துணை செய்வதாகவும் உறுதியளித்தனர். எஸ்றா 10:2-4 கூறுவதிலிருந்து மக்கள் உண்மையாய் முழுவதும் கடவுள் பக்கம் திரும்பினர் என்பதும் இது உண்மை எழுப்புதல் என்பதும் தெரியவருகிறது. இவையனைத்திற்கும் அடிப்படை எஸ்றாவின் விண்ணப்பமே!
மன்றாட்டு வீரன் நெகேமியா
பழைய ஏற்பாட்டில் ஜெபவீரர்களை நாம் காணும்போது எருசலேமை மீண்டும் கட்டி எழுப்பிய நெகேமியாவை நாம் மறக்கமுடியாது. நாம் கண்ட பிற ஜெப வீரரைப்போன்று நெகேமியாவும் மன்றாட்டு வீரனே. பாபிலோனுக்குச் சிறையாகச் சென்று மீண்டும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குத் திரும்பி எருசலேமை மீண்டும் கட்டும் பணியில் ஈடுபட்ட யூதர்களில் நெகேமியா மிகச் சிறந்தவன். மன்றாட்டில் உறுதியாய்த் தரித்திருந்ததாலேயே இவனுக்கு அப்பணியில் ஈடுபடுவது சாத்தியமாயிற்று. அவனும் பிறரைப்போல சிறையானவனே. மேலும் அவன் மன்னனுக்குப் பானபத்திரக்காரனாயிருந்ததால் உத்திரவாதமான பொறுப்பும் இருந்தது. தன்னினத்தல்லாதவருக்கு இப்பணியை மன்னன் அளிப்பது மிக அரிது. மன்னன் பருகும் திராட்சரசம் அனைத்தும் பானபத்திரக்காரன்மூலமே செல்லுமாதலால் அவன் நஞ்சைக் கலந்து கொடுக்கவும் வாய்ப்புண்டு. எனவே மன்னன் உயிரே பானபத்திரத்தின் கையில் ஊசலாடியது எனக் கூறின் மிகையாகாது.
நெகேமியா பாபிலோனிலிருந்த சமயம் அவனுடைய உடன் பிறந்தவனும் நண்பர் சிலரும் அவனைக் காண பாபிலோனுக்கு வந்தார்கள். எருசலேமிலுள்ள மக்களைக்குறித்து நெகேமியா அக்கறையுடன் விசாரித்தான். அவனுடைய உடன் பிறந்தவன், எருசலேமின் மதில்கள் இடிக்கப்பட்டு, அங்கிருந்த சில யூதர்கள் கடுமையாய் நடத்தப்படுவதைக் குறித்துத் துக்கச் செய்தியை நெகேமியாவிற்கு அறிவித்தான். இதை செவியுற்ற நெகேமியா உட்கார்ந்து அழுது உணவருந்தாது துக்கமுகத்துடன் பரலோகத்தின் தேவனை நோக்கிக் கதறினான் என்று நெகேமியா 1:4ல் காண்கிறோம்.
தன் நாட்டை விட்டு வெகு தூரத்திலிருந்தாலும் நேகேமியாவின் மனதும் அவன் நேசித்த இஸ்ரவேல் மக்களிடமேயிருந்தது. சீயோன் நகரத்தைக் குறித்து அவன் கருத்துள்ளவனாயிருந்ததோடு ஆண்டவருக்கு உண்மையுள்ளவனாயிருந்தான். தன் பட்டணத்தையும் மக்களையும் குறித்துத் துயரச் செய்தியைக் கேள்விப்பட்டபோது அழுது புலம்பினான். நம்மிடையே காணப்படுகிற தீமையைக்குறித்து அழுது புலம்புவோர் இன்று உளரா? நம் சபைகளில் தீமையையும் பாவத்தையும் காணும்போது நாமும் இப்படித்தான் கதறவேண்டும். ஆனால் இன்று குடும்பங்களிடையே , சபைகளிடையே, மக்களிடையே காணப்படுகிற எழுப்புதலற்ற தன்மைக்காகவும் உலகப் பற்றிற்காகவும் அழுது ஜெபிக்கிற கடவுளுடைய பிள்ளைகள் வெகுசிலரே. பலர் கிறிஸ்தவ சமுதாயத்தின் இதுபோன்ற சீர்கேடான நிலையைக் குறித்து உணராதிருக்கின்றனர். ஆனால் நெகேமியா தேவையை உணர்ந்தான். தன்னைத் துன்பக்கடலில் மூழ்கடித்த இக்காரியங்களைக் குறித்து நெகேமியா ஜெபித்தான் என்பது நெகேமியா 1:5-11ல் காண்கிறோம். இதைக் கவனமாய் வாசித்துப் பாருங்கள். கடவுளைத் துதித்து ஆரம்பித்து பின் தன் தேசத்தின் பாவத்தை அறிக்கையிட்டான். பின்னர் கடவுளின் வாக்குத்தத்தங்களை நினைப்பூட்டினான். அதன் பின்னர் கடவுள் இரக்கங்காட்டிய இதுபோன்ற சூழ்நிலைகளை எடுத்துக் காட்டினான். இறுதியாக ஒரு விண்ணப்பமும் ஏறெடுத்தான். இது சிறந்த எடுத்துக்காட்டு மன்றாட்டாகும். எருசலேமுக்குச் சென்று அங்குள்ள காரியங்களைச் சரிப்படுத்த முனைந்தால் அதற்கு முன்னர் மன்னனிடம் அனுமதி பெறவேண்டும் என்பதை நெகேமியா அறிந்திருந்தபடியால், மன்னன்முன் செல்வதற்குத் தேவையான பெலனையும் அரசன் கண்களில் தயவு கிடைக்கவும் கடவுளிடம் மன்றாடினான். தன் ஜனங்களிடத்து மட்டுமன்று புறஜாதியான மன்னனிடத்தும் கடவுள் கிரியை செய்யமுடியும் என்று நெகேமியா நம்பினான். மன்னனுக்கு யூத மக்கள் மீதும் எருசலேம்மீதும் எந்தவிதப் பற்றுமில்லாவிட்டாலும் நெகெமியாவிற்கு நீண்ட நாட்கள் எருசலேம் செல்வதற்கு அனுமதி கொடுக்கவும் மன்னன் இசைவதற்குக் கடவுள் வழிவகுக்க முடியுமென நம்பினான்.
மன்னன் முன் நெகேமியா நிற்கவேண்டிய நேரம் வந்தது. அரச சமுகத்தில் நின்ற நெகேமியாவிடம் அவனுடைய சோகத்திற்குக் காரணம் கேட்டான் மன்னன். காரணத்தையறிந்த மன்னன் நெகேமியாவிற்கு விடுமுறை கொடுத்தான். அதுமட்டுமா? அவனுடைய வழிப்பயணத்திற்குத் தேவையானவற்றையும் கொடுத்தனுப்பினான். அரசசமுகத்திற்குச் செல்லுமுன்னரும் நெகேமியா ஜெபித்தானெனினும் மன்னனுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போதே மனதிற்குள் ஜெபித்தான் (நெகே.2:4). நெகேமியாவின் இடைவிடாத உறுதியான ஜெபம் வெற்றியளித்தது. புறஜாதி மன்னன் மனதிலும் ஜெபத்திற்கு பதிலாக கடவுள் செயல்படமுடியும். எஸ்தர் ராணி அரச முகத்திற்கு அழைக்கப்படாமல் சென்றாள். கடவுள் தம் ஆவியானவரால் மன்னனைத் தொட்டதால், மன்னன் தன் கோலை நீட்டி ராணியின் வரவிற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.
எருசலேமுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பிறகும் நெகேமியா ஜெபிப்பதை விடவில்லை. எருசலேமின் மதில்களைக் கட்ட ஆரம்பித்ததும் சன்பல்லாத்தும் தொபியாவும் எதிர்த்தார்கள். சுவரெழுப்புகிறவர்களைக் குறித்து கேலிசெய்து பகடி செய்தனர். அவர்களுடைய சக்கந்தம் நெகேமியாவைப் பாதிக்கவில்லை. வேலை முடியுமட்டும் உறுதியாயிருந்தான். வேலைசெய்யும்பொழுதே ஜெபித்தான். தன் பகைவர்களைக் குறித்துக் கர்த்தரிடத்தில் முறையிட்டான் (நெகே.4:4-9). சுவரெழுப்பி முடிந்த பின்னரும் பகைவர்கள் எதிர்த்தனர். ஆனால் நெகேமியா ஜெபத்தில் உறுதியாகத் தரித்திருந்து கடவுள் தன் தேவையைச் சந்திப்பாரென நம்பினான் (நெகே.6:9).
ஒரு கள்ளத் தீர்க்கதரிசிமூலம் நெகேமியாவைப் பயமுறுத்தி வேலையைத் தடைபண்ண சன்பல்லாத்தும் தொபியாவும் முயன்றனர். இம்முறையும் தன் பகைவரைக் குறித்து ஆண்டவரிடத்தில் முறையிட்டதோடு அவர்களுடைய தீவினைக்குத்தக்கதாய் அவர்களுக்குச் சரிக்கட்டும்படியும் ஜெபித்தான் (நெகே.6:14). தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியனின் ஜெபத்தைக் கர்த்தர் கேட்டுப் பதிலளிக்கவே பகைவரின் திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போயிற்று.
அடுத்து, லேவியருக்குக் கொடுக்கப்படவேண்டிய தசம பாகத்தை மக்கள் செலுத்தாததால் தேவனுடைய ஆலயம் புறக்கணிக்கப்பட்டதை நெகேமியா கண்டு, தங்கள் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை மக்கள் லேவியரிடம் ஒப்படைப்பதற்கான வழிவகைகளைச் செய்தான். அதன்மூலமாய் லேவியர் ஆலயப் பணிகளில் ஈடுபடவும் செய்தான். இதைக் கண்காணிக்க பொக்கிஷ அறை விசாரிப்புக்காரரையும் நியமித்தான். இதைச் செய்து முடித்ததும் என் தேவனே, நான் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப் போடாமல் இந்தக் காரியத்தில் என்னை நினைத்தருளும் என்று ஆண்டவருடைய ஆலயத்திற்காகத் தான் செய்த காரியத்தைக் கர்த்தருக்கு நினைப்பூட்டினான் (நெகே.13:14). இந்த மன்றாட்டைக் கண்ணுற்ற பின்னர் தன் நற்செயல்களைப் பிரஸ்தாபிக்க ஆலயத்திற்குச் சென்ற பரிசேயனைப்போல நெகேமியாவும் சுயநீதியுள்ளவனென எண்ணுதல் கூடாது (லூக்.18:11-12). எசேக்கியாவைப்போல நெகேமியாவும் தன் உள்ளத்தின் வாஞ்சையைக் கர்த்தர் பேரில் தான் கொண்டிருந்த நம்பிக்கையையுமே எடுத்துக் கூறினான்.
ஓய்வு நாளில் ஓய்ந்திருக்கவேண்டுமென்று கடவுள் கற்பித்த கற்பனையை மீறிய தீச்செயலையும் நெகேமியா மக்களிடத்தில் கண்டான். கடவுளுக்குக் கீழ்ப்படியும்படி மக்களைப் பணித்தான். கொள்வனையும் கொடுப்பனையும் ஓய்வுநாளில் இல்லாதபடிப் பார்த்தான். இதைச் செய்யும்போதும் அதற்குத் தேவையான கிருபையையும் இரக்கத்தையும் தரும்படி கடவுளிடத்து மன்றாடினான் என்பதற்கு நெகேமியா 13:23 ஆதாரம்.
இதைத் தவிர சரிப்படுத்தவேண்டிய காரியம் மற்றொன்றும் இருந்தது. அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதி பெண்களை யூத மக்கள் சிலர் மணம் செய்திருந்தனர். அவர்களைக் கடிந்துகொண்டு சிலரைச் சிட்சித்தான். இந்தத் தீயபழக்கத்தை அடியோடு வெறுப்பதாக வாக்குக்கொடுக்கும்படி மக்களிடத்து நெகேமியா கேட்டான். மேலும் அன்னியரிடத்துப் பெண்கொண்ட ஆசாரியன் ஒருவனை நெகேமியா துரத்திவிட்டான். இவையனைத்தையும் செயல்படுத்தியபோதே நெகேமியா கடவுளை நோக்கி, தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும் என அருமையாக, எளிமையாக ஜெபித்தான் (நெகே.13:29).
நெகேமியாவைப் போன்ற மன்றாட்டு வீரர் இன்று நம் சபைகளுக்குத் தேவை. ஆலயம் கட்டியெழுப்ப முனையும் எந்தச் சபையும் அடிப்படையை ஜெபத்தோடு போடுவதோடு, தொடர்ந்து சுவரெழுப்பும்போதும் ஜெபிக்கவேண்டும். ஜெபத்தின்மூலம் சத்துருக்களை மடங்கடிப்போம். சபையைக் குறித்து கவலையுற்று நிர்விசாரமாய் அலைகிற மக்களையும் ஜெபம் அசைக்கமுடியும். கடவுளுடைய ஊழியத்தை உளப்படுத்தும் எல்லாவற்றிற்காகவும் நாம் ஜெபிப்போம். உலகத்தில் ஊழியம் செய்யும் அனைவரையும் ஜெபம் உறுதிப்படுத்தி நிலைநிறுத்தும். நாம் ஜெபிக்கும் வீரராய் நெகேமியாவைப்போலத் திகழ்வோமாக.
ஜெபித்த சிறுவன் சாமுவேல்
சாமுவேல் ஜெப வீரனாக விளங்கியது வியப்பிற்குரியதன்றோ. காரணம் அவன் பிறந்ததுமுதல் ஜெபத்தின் சூழ்நிலையிலேயே இருந்தான். சாமுவேலின் தாய் அன்னாள் தனக்கு ஒரு மகன் வேண்டுமென ஜெபித்ததற்குப் பதிலாக பிறந்தவன் சாமுவேல். கர்த்தர் தனக்கு ஒரு மகனைக் கொடுத்தால் அவனைக் கர்த்தருடைய ஊழியத்திற்கே அர்ப்பணித்துவிடுவதாய் வாக்குப்பண்ணினாள் அன்னாள். குழந்தையாயிருக்கும் சமயம் ஜெபத்தில் கருத்தூன்றிய தாயின் பாதுகாப்பிலிருந்தான் சாமுவேல். வளர்ந்தபின் வாக்குப்பண்ணப்பட்டபடியே கர்த்தருடைய ஊழியத்திற்கென ஆலயத்தில் கர்த்தருடைய ஆசாரியனாகிய ஏலியின் பொறுப்பில் விடப்பட்டான். ஆதிமுதல் ஜெபம் அவனைச் சூழ்ந்திருந்தது.
ஆதியிலிருந்தே கடவுளின் சத்தத்தை கேட்கக்கூடிய இடத்தில் சாமுவேல் இருந்தான். முதலில் கடவுள் பேசியபோது சாமுவேல் அறிந்துகொள்வில்லையென்பது உண்மையெனினும், உணர்ந்தபிறகு கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் (1.சாமு.3:10). என்று கூறியதிலிருந்து இளவயதிலேயே கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, ஜெபிக்கும் பழக்கம் உடையவனாயிருந்தான் என்பது புலனாகிறது.
சாமுவேலின் தாய் ஜெபிப்பவளாய் இல்லாமலிருந்தால் சாமுவேல் இந்நிலையை அடைந்திருப்பானா? ஆலயத்தைத் தவிர மாறுபட்ட சூழ்நிலையில் அவன் வாழ்ந்திருந்தால் அவன் இப்படி மாறியிருப்பானா? அவனுடைய இளம் பருவத்தில் அவன் தாயும், ஏலியுமல்லாது வேறு எவரேனும் அவனை வளர்த்திருந்தால் சாமுவேல் இந்த உன்னத நிலையை எட்டியிருப்பானா? நான் அப்படி நினைக்கவில்லை? கடவுளுக்கு இடந்தராத ஓர் உலகப்பற்றுள்ள தாயால் உலகத்தைச் சேவிக்கும் ஒரு குடும்பத்தில் சாமுவேல் வளர்ந்திருந்தால் அவன் எப்படி இருந்திருப்பான்? அன்னாள் சாமுவேலைக் குறித்து அவனுடைய இளவயதில் எடுத்த முயற்சி பின்னால் அவன் ஜெபவீரனாய் மாறுவதற்கு அடிகோலிற்று. உங்கள் பிள்ளைகளும் இளம் பிரயாத்திலேயே ஆண்டவருக்கு கீழ்ப்படிய நீங்கள் விரும்பினால் அவர்களுக்காக அன்னாளைப்போல் ஜெபியுங்கள். கடவுளுடைய பிள்ளைகளோடு தொடர்புகொள்ளச் செய்யுங்கள். தேவாலயத்திற்கு அனுப்புங்கள்.
சாமுவேல் சிறுவனாயிருந்தபோதே ஆண்டவரைச் சேவிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் பழகியதால், வளர்ந்து வந்தபோதும் அந்தப் பழக்கம் தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும் என்பதுபோல தொடர்ந்து அவனை ஒரு ஜெபவீரனாக மாற்றியது. ஜெபிக்கும் பழக்கமுடைய தாய்மாருக்குப் பிள்ளைகள் பிறந்து அவர்கள் தேவசமூகத் தொடர்புடையவராய் இருப்பாரேல் இளவயதிலேயே ஆண்டவருக்குக் கீழ்ப்படியவும் அவரைச் சேவிக்கவும் கற்றுக்கொள்வாரென்பது திண்ணம். சபைகளுக்கு விண்ணப்பத்தில் வல்லோர் தேவையெனின் அதற்கு விண்ணப்பிக்கும் தாய்மாரும், மன்றாடும் குடும்பங்களும் தேவை. மேலும் நம்முடைய சபை கூடுமிடங்களும் உண்மையான ஜெபவீடுகளாக இருத்தல் வேண்டும். ஜெபிக்கும் பழக்கமுடைய பிள்ளைகள் அநேகமாய் சாமுவேலைப்போல ஜெபிக்கும் தாய்மாருக்குப் பிறந்தவராகவே இருப்பர். ஜெபிக்கும் தலைவர்கள் உருவாகுவது ஜெபிக்கும் இல்லங்களிலேதான்.
வெகுநாட்கள் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையில் ஒப்படைக்கப்பட்டனர். கர்த்தருடைய பெட்டி அபினதாபின் வீட்டிலே இருந்தது. இந்தப் பெட்டியைப் பாதுகாக்கும்பொறுப்பு அபினதாபின் மகன் எலெயாசாரின்மேல் விழுந்தது. மக்களில் பலர் விக்கிரகங்களை வணங்கி வந்தனராதலால் அது குறித்து சாமுவேல் வருந்தினான். மீண்டும் பழைய நிலைக்கு வரும்படியும் விக்கிரகங்களை அழிக்கும்படியும் மக்களிடம் மன்றாடினான் சாமுவேல். கர்த்தரைச் சேவிக்க ஆரம்பித்தால் பெலிஸ்தர் கையிலிருந்து விடுதலை கிடைக்குமென்றும் கூறினான். இது கேட்ட மக்கள் சாமுவேல் சொற்படி நடந்து கர்த்தரைச் சேவிக்க முற்பட்டாரென 1.சாமுவேல் 7:4ல் காண்கிறோம். மக்கள் சாமுவேலுக்குச் செவிகொடுத்ததும் அவர்களை ஜெபிக்கும்படி வேண்டினான். மக்களும் மிஸ்பாவிலே கூடினர். அவர்களுக்காக மன்றாடினான் (1.சாமு.7:5). அவன் ஜெபிக்கும்பொழுதே பெலிஸ்தர் அவர்களைச் சூழ பாளயமிறங்கினார்கள். ஆனால் ஆண்டவருடைய கரம் அவருடைய பிள்ளைகள் பக்கம் இருந்தது. கர்த்தர் இடி முழக்கத்தால் பெலிஸ்தரைக் கலங்கடித்தார். இஸ்ரவேல் தேசம் கடவுளையறிந்து அவருடன் பேச்கற்றிருந்த ஒரு தலைவனைக் கொண்டிருந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டது.
வருடந்தோறும் ராமாவிலிருந்து தன் வீட்டிற்குச் செல்வான் சாமுவேல். மேலும் மிஸ்பா, இக்கால், பெத்தேல் முதலயி இடங்களுக்கும் ஆண்டுதோறும் செல்வான். ராமாவிலே கர்த்தருக்குப் பலிபீடம் எழுப்பி அங்கு தன் வீட்டாருக்காய்ப் பலியிட்டு ஜெபித்தான் சாமுவேல். தன் பட்டணத்திற்கும், நாட்டிற்குமன்றித் தன் வீட்டாருக்காகவும் ஜெபித்தது நோக்கத்தக்கது. கடவுளை வழிபடும் இடமாக இருந்தது அவனுடைய வீடு. பிற வீடுகளைப்போல அவன் வீட்டில் சிலைகளுக்கு இடமிருக்கவில்லை. கடவுளற்ற இந்தச் சமூகத்திற்கு இத்தகைய குடும்பங்கள் தேவை அன்றோ. துதிதோத்திர பலி ஏறெடுக்கப்படும் இல்லங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாம். குடும்ப ஜெபமில்லா வீடு கூரையில்லா வீடு போன்றதாகும்.
சாமுவேல் ஜெபித்த ஆசாரியனாயும், தலைவனாயும், ஆசிரியனாயும், தகப்பனாயுமிருந்தான். இன்று இத்தகைய தாய்மாரும் தகப்பன்மாரும் நமக்குத் தேவை. கடவுளை விட்டுப் பின்வாங்குதலுக்கும், வழுக்குதலுக்கும் அடித்தளம் குடும்பமே எனினும் இதுவே எழுப்புதலுக்கும் முதற்படியாயும் அமையும்.
இஸ்ரவேலில் ஒரு பெரும் கிளர்ச்சி ஆரம்பமாகியது. கடவுளே இஸ்ரவேலருக்கு இதுவரை அரசனாயிருந்தார். ஆனால் மக்கள் தங்களைச் சூழவிருக்கும் பிற நாட்டவரைப்போலத் தங்களுக்கும் ஒரு மன்னன் வேண்டுமென விரும்பியபடியால் ஓர் இக்கட்டான சூழ்நிலை உருவாகிறது (1.சாமு.8:5). இதைக் கேள்வியுற்ற சாமுவேல் கடவுளுக்கு விரோதமாய் மக்கள் சொல்வது குறித்து வருந்தினான். ஏனெனில் மக்கள் எக்காலத்தும் கடவுளுக்கு அடிபணிந்திருக்கவேண்டுமெனவே அவன் விரும்பினான். சாமுவேலைப்போன்று ஜெபிக்கும் ஒவ்வொருவரும் இவ்வண்ணமே விரும்புவர். கடவுள் அவனைத் தேற்றி மக்கள் சாமுவேலைப் புறக்கணிக்கவில்லையெனவும், தம்மையே புறக்கணித்தனரெனவும் கூறியதோடு, மக்கள் கூறியபடி செய்யவும் கட்டளையிட்டார். தன்னை உளப்படுத்திய எந்தக் காரியத்தையும் ஜெபித்துச் செய்யவேண்டுமென்று அறிந்திருந்த சாமுவேல் தேசத்திற்காகவும் ஜெபித்தான் (1.சாமு.8:6-7). அரசியலில் பெரும் மாறுதலேற்பட்டுக் கடவுளுக்குப் பதிலாக ஒரு மனிதன் அரச பதவியை ஏற்கப் போகிறான் என்றதால் அதிக ஜெபம் தேவைப்பட்டது. அரசியல் தலைவருக்காகவும், சட்டநிபுணர்களுக்காகவும், நியாயாதிபதிகளுக்காகவும் கடவுளுடைய பிள்ளைகளின் ஜெபமே தேவை. நாம் அப்படி ஜெபித்தால் அதிகாரிகள் ஏராளமான குறைகளைத் தவிர்க்க இயலுமன்றோ?
இதோடு நிலைமை முற்றுபெற்றுவிடவில்லை. மக்களுடைய வேண்டுகோளுக்குக் கடவுள் இணங்கினாலும் அவருக்கு அது விருப்பமன்று. மக்கள் தங்களை ஆள ஒரு மன்னனுக்காகக் கூக்குரலிட்டது தவறு என்பதை அவர்கள் உணரவேண்டும். கடவுளே எக்காலத்தும் அவர்கள் மன்னர், அவரே அவர்களுடைய நலனைவிரும்பி அவர்கள் எவ்வண்ணமாய் ஆளப்படுவார்களென்பதைப்பற்றி அக்கறை கொண்டுள்ளார் என்பதை அவர்கள் அறியவேண்டும். ஆகவே இந்நிலையிலும் சாமுவேல் மன்றாடினான். மக்களை அமர்ந்திருக்கும்படி கூறிவிட்டு மக்கள் தங்கள் பொல்லாப்பை உணரக்கூடிய அளவில் இடியும் மழையும் தோன்றிற்று என்பதற்கு 1.சாமுவேல் 12:17-18 சான்று கூறும் மக்கள் மாண்டுபோகாதபடிக்கு அவர்களுக்காக ஜெபிக்கும்படி சாமுவேலிடம் மன்றாடினான். இது குறித்து ஜெபித்த சாமுவேலின் ஜெபம் மீண்டும் கேட்கப்பட்டது.
இன்னொருமுறை சாமுவேல் ஜெபித்ததைக் குறித்தும் நாம் காணலாம். அமலேக்கியரையும் அவர்களது உடமைகளையும் அழிக்கும்படிக்குச் சவுலுக்குக் கட்டளை கொடுத்திருந்தார் கடவுள். ஆனால் அமலேக்கியரின் அரசனாகிய ஆகாகையும் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் சவுல் தப்பவிட்டான். அது குறித்து சாமுவேல் கேட்டபோது மக்கள் பலியிடுவதற்காக ஆடுமாடுகளை விரும்பினதினால் தப்பவிட்டேன் என்று கூறினான். கர்த்தர் சாமுவேலை நோக்கி சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்று வருந்திக் கூறினார் (1.சாமு.15:10-11). இது கேட்ட சாமுவேல் மனமுடைந்து இரா முழுவதும் ஜெபித்தான். ஆண்டவரை நேசித்து தேசப்பற்றுடையோராய் வாழும் கடவுளுடைய மக்கள் கடவுளுக்குப் பிள்ளைகளின்மேல் மேன்மையையே பெரிதும் விரும்புவர். கடவுளுக்குப் பணியாமல் தீமையைச் செய்யும்போது கடவுளுடைய பிள்ளைகள்மேல் வெகுண்டு வருத்தடைவர். சாமுவேலைப்போல் அச்சமயங்களில் ஜெபிக்கவும் செய்வர். சவுலைக்குறித்து வெகுண்டு வருந்தியதாலேயே சாமுவேல் இராமுழுவதும் ஜெபித்தான். இஸ்ரவேல் மக்களின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடியதாய் இச்சூழ்நிலை அமைந்ததால் அதைக் கடவுளின் பாதத்தடியிலேயே படைக்க அறிந்திருந்தான் சாமுவேல்.
நாடு கடத்தப்பட்ட ஜெபவீரன் தானியேல்
வாழ்க்கையில் பல சிறந்த அனுபவங்கள் தானியேலுக்கிருந்தன. அவன் பெர்சியாவிலிருந்த சமயம் அந்நாட்டு மன்னன் முப்பது நாட்களுக்கு அரசனைத் தவிர வேறு எவரையும், ஏன் கடவுளைக்கூட வணங்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தான். இந்தக் கட்டளைக்குப் பணியாதோர் சிங்கக்கெபியில் போடப்படுவர் என்ற தண்டனையும் விதிக்கப்பட்டது. தானியேல் தினமும் காலை, மாலை, நடுப்பகல் வேளைகளில் எருசலேமுக்கு நேராய்ப் பலகணிகளைத் திறந்து வைத்து முழங்காற்படியிட்டு ஜீவனுள்ள தேவனை நோக்கி ஜெபித்துவந்தான். இப்பொழுது என்ன செய்வான்? ஜெபிப்பதை விட்டுவிட்டானா? இல்லவே இல்லை. அரச கட்டளை எந்தவிதத்திலும் தானியேலைப் பாதிக்கவில்லை. அவன் தொடர்ந்து வழக்கப்படியே ஜெபித்து வந்தான். இதைத் தானியேலின் விரோதிகள் கண்டு மன்னனிடம் முறையிட்டார்கள். தானியேல் சிங்கக் குகைக்குள் போடப்பட்டான். ஆனால் கடவுள் தம் தூதனையனுப்பி, சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அற்புதமாய் அவருடைய பிள்ளையாகிய தானியேல் காப்பாற்றப்பட்டான். இதேவிதமாய் இன்று ஜெபிக்கும் பரிசுத்தவான்களைக் கடவுள் விடுவிக்கவல்லவராயிருக்கிறார் அன்றோ?
தானியேல் தன் தாய்நாட்டை விட்டு அயல் நாட்டில் தங்கியிருந்தான். அந்நிய நாட்டில் நாடு கடத்தப்பட்ட நிலைமையிலிருந்தான். ஆயினும் அவன் தன் தேவனை மறக்கவில்லை. வெகுதூரத்தில் எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டிருந்தது. பாபிலோனில் ஓய்வுநாளை ஆசரிப்பவர் எவருமில்லை. கர்த்தருடைய வேதம் ஒரு சில பிரதிகளே இருந்தன. இளைஞனாயிருக்கும்போதே தானியேல் கர்த்தருக்கு உண்மையுள்ளவனாயிருந்தான். தன்னைச் சூழக் கடவுளின் பிள்ளைகள் ஒரு சிலரே இருப்பினும் கடவுளை உத்தமமாய் சேவித்தான். மறைவாகவேனும் ஜெபிக்கத் தவறவில்லை தானியேல்.
அந்நிய நாட்டில் அரசன் அருந்தும் உணவை அருந்தவும் மதுவைக் குடிக்கவும் ஏற்பட்ட சூழ்நிலை தானியேல் முதல் சோதனையாகும். இவன் மட்டுமன்றி இவனைச் சார்ந்த மூன்று யூதநண்பர்களும் சோதிக்கப்பட்டனர். அரண்மனை உணவு, விக்கிரகங்களுக்குக்குப் படைக்கப்பட்டதால் அதை உண்பது தவறு என அவனும் அவன் தோழரும் வெறுத்தனர். சோதனையில் தானியேலுக்கும் அவன் மூன்று தோழருக்கும் கடவுள் வெற்றி கொடுத்தார். தானியேல் முதலாம் அதிகாரத்தைப் படித்து இன்புறுங்கள்.
இதைவிடக் கடின சோதனைகள் தானியேலுக்குக் காத்திருந்தன. நேபுகாத்நேச்சார் ஒரு விநோதமான கனவு கண்டான். தான் ஏதோ கனாக்கண்டோமென்று உணர்ந்தானேயொழிய கண்டவற்றை நினைவில் இருத்த இயலவில்லை. எனவே ஞானிகளை அழைத்து அவன் கண்ட கனவையும் அதன் பொருளையும் கூறுமாறு பணித்தான். இது அவர்களுக்கு இயலாத ஒரு செயலாயிற்று. தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற இந்த ஞானிகள் சோதிடர்கள், குறிசொல்லுகிறவர்கள் முதலானோரைவிட வேறுபட்டு இருப்பினும் அவர்களையும் இவர்களுடைய பட்டியலில் மன்னன் சேர்த்துக்கொண்டான். கனவை விடுவிக்காதோரைக் கொலைசெய்யும்படிக்கு கட்டளையும் விடுவித்தான். இந்தக் கட்டளை நிறைவேற்றப்படுமுன்னர் ஜெபிப்பதற்கு ஒரு தருணம் கேட்டான் தானியேல். தானியேலும் அவன் மூன்று தோழரும் கூடி தானியேலுக்குக் கனவையும் கனவின் பொருளையும் வெளிப்படுத்தும்படி ஜெபித்தனர். கடவுள் அப்படியே செய்தார். இரவில் ஒரு காட்சியில் கனவைக் கர்த்தர் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். உடனே தானியேல் மன்னனிடம் ஓடி, ஜெபத்தின்மூலம் தனக்கு வெளிப்படுத்தப்பட்டதை விளக்கினான். கனவையும் சொன்னான். அதன் விளக்கத்தையும் சொன்னான் தானியேல். கனவையும் பொருளையும் செவியுற்ற மன்னன், அதிசயித்து தானியேலின் தேவனே உண்மை தேவன் என்பதை ஏற்றுக்கொண்டதோடு தானியேலுக்கும் அவன் தோழருக்கும் அரசியலில் சிறந்த பொறுப்புக்களையும், பதவியையும் கொடுத்தான். இது ஜெபத்தின் பலனேயன்றிப் பிறிதல்ல. ஒவ்வொரு நாட்டிலும் இக்கட்டு நேரத்தில் ஜெபிக்கக்கூடிய கடவுளுடைய பிள்ளைகள் இருப்பாரேல் அந்த நாட்டின் தலைவர் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்.
நாம் ஜெபிக்கும் சமயம் நம்முடைய பிரச்சனைகளுக்கும் சிக்கல்களுக்கும் விடுதலை கிடைக்கும். ஜெபிக்கும் மக்களுக்குத் தேவையான விடுதலையை அடிக்கடி தூதர்கள் மூலமும் கடவுள் கட்டளையிடுவார். தன்னை உயர்த்திய தன் பிதாக்களின் தேவனைத் தானியேல் ஒருபோதும் மறந்தானில்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் தானியேல் வெள்ளாடும் ஆட்டுக்கடாவும் தோன்றிய ஒரு தரிசனம் கண்டான். தரிசனத்தின் பொருள் புரியாத புதிராய் இருந்தபோதும் அது தேவனால் கொடுக்கப்பட்ட பொருள் பொதிந்த தரிசனம் என்பதை மட்டும் தானியேல் புரிந்துகொண்டான். அது குறித்துத் தானியேல் ஜெபித்தபோது, தேவன் காபிரியேல் தூதனை அனுப்பி இந்த அற்புத தரிசனத்தின் பொருளைத் தானியேலுக்கு விளக்கினார்.
இன்னும் சில ஆண்டுகள் கழித்து எரேமியாவின் தீர்க்கதரிசன உரைகளைக் கற்றதன்மூலம் எருசலேமின் எழுபது ஆண்டு பாழ்க்கடிப்புகள் நிறைவேறி முடியுங்காலம் நெருங்கிற்று என தானியேல் அறிந்துகொண்டான். தானியேல் தன் மக்களுடைய பாவங்களைக் குறித்துத் துக்கித்து, மனங்கசந்து, இரட்டுடுத்தி, சாம்பலிலிருந்து தேவனை நோக்கி மன்றாடியதை தானியேலின் புத்தகம் 9:3-19ல் படித்துப் பாருங்கள். அவன் இவ்வாறு ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் காபிரியேல் தூதன் தோன்றித் தானியேலைத் தொட்டு அவனுடைய மக்கள் எதிர்காலத்தில் பெறக்கூடிய நன்மைகளைக் குறித்துப் பேசினான். இத்தகைய எளிய வகையில் நாமும் மன்றாடினால் நன்மையடைவோம். கடவுளுடைய மக்களின் நிகழ் காலத்தைக் குறித்தும், வருங்காலத்தைக் குறித்தும் நாம் ஜெபிக்கும் சமயம் கர்த்தர் நம் விண்ணப்பங்களை கேட்பதோடு அதற்குப் பதிலளிப்பதற்குத் தமது தூதர்களை சில வேளைகளில் உபயோகிக்கிறார். நாம் கருத்துடன் ஜெபிக்கும் சமயம் தூதர்கள் நம்மைச் சூழ இருந்த நம்மைப் பாதுகாக்கின்றனர். நமக்குப் பணிவிடை செய்கின்றனர் (தானி.6:22, சங்.91:11-12,  எபி.1:14).
தானியேலின் விண்ணப்ப வாழ்க்கையில் இன்னும் ஒரு நிகழ்ச்சியை நாம் காண்போம். பெர்சியாவின் அரசனான கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் தானியேலுக்கு ஒரு காரியம கர்த்தரால் அறிவிக்கப்பட்டது. அது குறித்து மூன்றுவாரகாலம் ருசிகரமான உணவு யாதும் புசியாமலும் இனிய திராட்சரசம் குடியாமலும், பரிமள தைலம் பூசாமலும் தானியேல் துக்கித்துக்கொண்டிருந்தான். இச்சமயத்தில் அவனுக்கு ஒரு விநோத அனுபவம் கிட்டிற்று. அவன் ஒரு தரிசனத்தில் சணல் வஸ்திரந்தரித்து, அரையில் ஊர்பாசின் தங்கக் கச்சையைக் கட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டான். அவன் சரீரம் படிகப் பச்சையைப்போல மின்னிற்று. முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும் கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், புயங்களும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும் இருந்தன. அவன் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போலவுமிருந்தது. இந்தத் தரிசனத்தைக் கண்டவுடன் தானியேலின் பெலனெல்லாம் அற்றுப்போயிற்று. உறங்குகிறவனைப்போல் தரையில் தானியேல் முகங்குப்புற வீழ்ந்தான். அப்போது ஒருவன் தானியேலைத் தொட்டதினால் தானியேல் முழங்கால்களும் கைகளும் தரையில் ஊன்றியிருக்க நின்றான். அந்த மனிதன் தானியேலைத் தூக்கி வைத்து பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன். கால் ஊன்றி நில் என்றான். தானியேலும் நடுக்கத்தோடு எழுந்து நின்றான். அப்போது அந்த மனிதன் தானியேலை நோக்கி, தானியேலே பயப்படாதே. நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டன. உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள் மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான். ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மீகாவேல் எனக்கு உதவியாக வந்தான். ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன். இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன். இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான் (தானி.10:12-14).
வேதாகமத்தின் இந்தப் பகுதி எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதன்று. ஆனால் தேவதூதர்கள் நம் ஜெபத்திற்குப் பதிலளிக்க கர்த்தரால் அனுப்பப்படுகிறார்கள். ஜெபத்தில் கரிசனையாயிருக்கிறார்கள் என்பதை மட்டும் இப்பகுதி உறுதிப்படுத்துகிறது. பெர்சியா தேசத்தின் அதிபதி போன்று ஜெபம் பதிலளிக்கப்படுவதைத் தடுக்கும் ஆவிகள் இருக்கின்றனவென்று புலனாகிறது. எனவே நாம் நம் பரம பிதாவை நோக்கி ஜெபிக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத வானமண்டலத்தின் பகுதிகளில் நமக்கு நன்மை செய்து கடவுளுக்குச் சேவை செய்யும் தூதர்களும் அந்தச் சேவையைத் தடுக்க முனையும் சாத்தானின் கையாள்களுக்குமிடையே கடும் போர் நிகழ்கிறது என்பது புலனாகிறது. தானியேல் ஜெபித்துக்கொண்டிருந்த மூன்று வாரகாலமளவும் இப்போர் தொடர்ந்தது. ஆனால் தானியேல் ஜெபிப்பதைவிடவில்லை. நாமும் நம் விண்ணப்பங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லையென்கிற காரணத்தால் ஜெபிப்பதை நிறுத்திவிடக்கூடாது. ஜெபிப்பதற்கு காலம் எடுப்பதுபோலவே ஜெபத்திற்கு பதிலிறுக்கவும் காலதாமதமாகும். கடவுள் நம் ஜெபத்திற்கு உடனடியாகப் பதிலிறுக்காமல் காலதாமதம் செய்தால் அதனால் கடவுள் நம் விண்ணப்பத்தையே கேட்கவில்லையென முடிவு கட்டிவிடக்கூடாது. நாம் ஜெபிக்கும் சமயம் நமக்கு மனஉறுதி தேவை. கடவுள் பதில் அனுப்பும்வரை தொடர்ந்து பொறுமையாய் ஜெபிக்கவேண்டும்.
கர்த்தருக்கு காத்திரு. அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு (சங்.27:14).
விண்ணப்பத்தில் விசுவாசம் வைத்த பாவிகள்
பழைய ஏற்பாட்டில் விண்ணப்பத்தைக் குறித்து விநோத கருத்துக்கள் பலவற்றைக் காண்கிறோம். கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போன மக்கள், அவரிடத்தில் ஜெபித்து விசுவாசம் வைத்துள்ள கர்த்தருடைய பிள்ளைகளைத் தங்களுக்காக ஜெபிக்கும்படிக் கேட்பதும் இவ்விநோத செயல்களுள் ஒன்றாகும். கர்த்தரிடத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் ஜெபித்தால் பலன் கிடைக்குமென்று கர்த்தரை வேண்டாமென்று தள்ளிய பாவிகள் நம்பினார்களெனில் அது விந்தைச் செயலே. சிலர் ஜெபவீரர்களென உலகத்தாரும் அறிந்திருந்தனர். கர்த்தருடைய பிள்ளைகள் அவரை அண்டி வாழுவதால் ஆசீர்வதிக்கப்படுகிறார்களென்பதையும், அம்மக்கள் தேவனுடைய கோபத்தையும், சாத்தானின் வல்லமையையும் காலந்தாழ்த்த முடியுமென்பதையும் அவர்கள் நம்பினார்கள். ஆகவே, இக்கட்டு நேரத்தில் இந்தப் பாவிகள் கர்த்தருடைய பிள்ளைகளைத் தங்களுக்காய் ஜெபிக்கக் கேட்பதிலிருந்து அவர்கள் விசுவாசம் புலனாகிறது.
இன்னொரு உண்மையான விந்தை யாதெனில், இன்றுபோல் கடவுளுடைய வழிகளை விட்டுப் பின்வாங்கிப் பயங்கரமான பாவங்களில் விழுந்த ஏராளமான மக்கள் அன்றும் இருந்தனர். இப்படி வழி விலகிப் போனார்களெனினும் ஜெபத்தைக் கேட்டு அதற்குப் பதிலளிக்கும் ஒரு கடவுள் இருக்கிறாரென்பதை அவர்கள் நம்பினார்கள். தேவனுடைய பிள்ளைகளின் ஜெபத்தை அவர் கேட்பாரென்றும் நம்பினர். இதை நாம் இன்றும், நேரிடையாகக் கண்கூடாகக் காணக் கிடைத்திருப்பது நம் சிலாக்கியமே. துன்பத்திலிருக்கும் துன்மார்க்கர் கடவுளுடைய பிள்ளைகளை ஜெபிக்கக் கேட்பதிலிருந்து பாவிகள்மேல் கடவுளுடைய பிள்ளைகளுக்கிருக்கும் செல்வாக்கு விளங்குகிறது. மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு பாவி தனக்காக ஒரு கடவுளுடைய பிள்ளையிடம் ஜெபிக்கும்படிக் கேட்கிறானென்றால் அது ஒரு முக்கிய கட்டமாகும். காரணமென்னவெனில் அப்படி ஜெபிக்கக்கோரும்போது அவன் பாவத்திலிருந்து திரும்பி இரட்சிக்கப்பட்டவர்களை நோக்கி, தங்களுக்காக ஜெபிக்கவேண்டுமென்று கேட்கும்போது, திருச்சபை அவர்களுக்காக ஊக்கமாய் ஜெபிப்பது மிகவும் முக்கியம். சபை விழிப்புள்ளதாயிருப்பின் அநேக துன்மார்க்கர் இவ்விதமாய் சபையினிடத்தில் வந்து அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்பதை நாம் நாளும் காணலாம். சொல்லளவில் இது நின்றால் போதாது. மாறாக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்வோருக்காகச் சபையானது திட்டமாய் ஜெபிக்கவேண்டும். இவ்விதமாய் துன்மார்க்கர் கடவுளுடைய பிள்ளைகள் தங்களுக்காக ஜெபிக்கும்படிக்கோரும் கட்டத்தில் எழுப்புதல் ஆரம்பிக்கிறது.
பழைய ஏற்பாட்டுக் காலத்திய நிலை
(1) இக்கட்ட நேரத்தில் விடுதலை பெறும் வழி ஜெபிக்கும் மக்களே என்பதைத் துன்மார்க்கர் அறிந்தனர்.
(2) ஜெபிக்கும் மக்களும் எப்போதும் தங்களுக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்கும் பழக்கம் உடையவராயிருந்ததால் உடனடியாக செயல்பட்டனர்.
(3) இத்தகைய மக்களின் ஜெபம் கர்த்தரால் கேட்டகப்பட்டது. அந்நாட்களில் பிறருக்காக ஜெபிப்பதே ஜெபத்தின் பெரும் பங்காயிருந்தது.
இன்றை நிலை என்ன? கிறிஸ்தவர்களை ஜெபிக்கக் கேட்பதற்கு மக்கள் ஏன் தயங்குகின்றனர்? குறைந்த அளNவு ஜெபிக்கும் ஆண்களும் பெண்களும் இருப்பதாலல்லவா? இதனால்லல்லவா துன்மார்க்கரில் வெகுசிலரே மனந்திரும்பி ஆண்டவர் பக்கமாய்த் திரும்புகின்றனர்.
தங்களுக்காக ஜெபிக்கும்படிக் கேட்டுக்கொண்ட சில துன்மார்க்கரைக் குறித்துக் காணுவோம். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குச் செல்லும்போது வழியில் கடவுளுக்கு விரோதமாயும் மோசேக்கு விரோதமாயும் முறுமுறுக்க ஆரம்பித்தனர் (எண்.21:5). கடவுள் இஸ்ரவேல் மக்கள்மீது எரிச்சலடைந்தார். அநேக மக்கள் சர்ப்பத்தினால் தீண்டப்பட்டு இறந்தனர். இப்போதுதான் மக்கள் கண்கள் திறக்கப்பட்டன. தாங்கள் பாவம் செய்ததை உணர்ந்தார்கள். மோசேயிடம் சர்ப்பங்களை நீக்கும்படி கர்த்தரிடம் ஜெபிக்கும்படி மன்றாடினபடியால் மோசேயும் ஜெபித்தான் (எண்.21:7-8). இஸ்ரவேலர் கடவுளுக்கு விரோதமாய் முறுமுறுத்துப் பாவம் செய்திருந்தபோதிலும் கடவுள் ஜெபத்தைக் கேட்டு பதிலளிப்பார் என்பதை நம்பினர். மேலும் அவர்களை வழிநடத்திய தலைவன் மோசே ஜெபிக்கும் பழக்கமுடையவன் என்பதை நன்கறிந்திருந்தனர். அதனால் கொடிய தீங்கிலிருந்து தன்னுடைய ஜெபத்தினால் மோசே மக்களை விடுவிக்கக்கூடுமென்றும் அவர்கள் நம்பினார்கள்.
யெரேபெயாம் என்ற மன்னனைப் பாருங்கள். இஸ்ரவேல் தேசம் கூறாக்கப்பட்டபோது வடபகுதியின் முதல் மன்னனாயிருந்தவன் இவனே. பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டிகளை உருவாக்கிப் பணிந்துகொள்ளும்படித் தன் மக்களுக்குக் கட்டளையிட்டான். இந்தப் பாவத்தினால், பின்னால் அவன் இஸ்ரவேலரைப் பாவத்திற்குட்படுத்தினவன் என்றே குறிப்பிடப்படுகிறான். இந்தத் துன்மார்கக்கத்திற்கிடையிலும் கர்த்தர் ஜெபத்திற்குப் பதிலிளிப்பவரென்பதை அவன் அறிந்திருந்தான். பெத்தேலில் பலிபீடத்தண்டைத் தூபங்காட்டி ஆசாரியனாய்ப் பணிபுரிந்தான். அவன் தூபங்காட்டப் பலிபீடத்தண்டை நிற்கையில் தேவனுடைய மனிதன் ஒருவன் யூதாவிலிருந்து வந்து, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து அதன்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம் (1.இராஜா.13:3) என்று கூறினான். இதனால் வெகுண்ட மன்னன் தீர்க்கதரிசிக்கு நேராகத் தன் கையை நீட்டித் தீர்க்கதரிசியைக் கைது செய்யுமாறு தன் சேவகர்களுக்குக் கட்டளை கொடுத்தான். ஆனால் அப்படி நீட்டப்பட்ட கரத்தை மடக்கக்கூடாமல் போயிற்று. தீர்க்கதரிசி உரைத்தபடியே பலிபீடம் வெடித்துச் சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டது. மன்னன் அதிசயித்துத் தன் பாவங்களுக்காய் கர்த்தர் தன்னைத் தண்டிக்கிறாரென்பதை உணர்ந்துகொண்டான். தன் கையை மடக்கக்கூடாதபடியினால் தீர்க்கதரிசியிடம் தனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டான். தீர்க்கதரிசி ஜெபித்தான், மன்னனின் கை முன்போலச் சீர்ப்பட்டது (1.இராஜா.13:6). இங்கு தேவகோபாக்கினை தன்மேல் வந்ததை உணர்ந்த துன்மார்க மன்னனை நாம் காண்கிறோம். அவன் என்ன செய்தான்? தனக்காக கடவுளுடைய பிள்ளை ஒருவரை ஜெபிக்கும்படிக் கேட்டுக்கொண்டான். இன்றைய கிறிஸ்தவர்கள் குறைந்த அளவு ஜெபிப்பதால் பாவிகளுக்கு அவர்களுடைய ஜெபத்தில் நம்பிக்கையில்லாமல் போகிறது. ஊக்கமாய், விசுவாசத்தோடே, பூரண அன்புடனே ஜெபிக்காத ஜெபம் பயனற்றது, வருந்தத்தக்கது.
யெரோபெயாமின் வாழ்க்கையில் இன்னொரு நிகழ்ச்சியைப் பாருங்கள். அவனுடைய மகன் நோய்வாய்ப்பட்டான். தன்னுடைய மகனுக்கு என்ன நேரிடுமென்பதை அகியா என்ற தீர்க்கதரிசியிடம் அறிந்துவரும்படித் தன் மனைவியைச் சீலோவுக்கு அனுப்புகிறான். அகியா கண் மங்கலடைந்து பார்வை தெரியாதவனானபடியால் மாறுவேடமணிந்து அந்நிய பெண்போல் தீர்க்கதரிசியிடம் சென்றாள் பெரோபெயாமின் மனைவி. ஆனால் அவன் இருப்பிடத்தை அடைந்து வாசற்படிக்குள் நுழையும்போதே அகியா அவளை யெரொபெயாமின் மனைவியே என்று அழைத்து, அவள் அந்நிய பெண்போல் வேடம் புனைந்திருந்ததையும் கூறித் துக்கசெய்தியையும் கூறினான். கடவுளுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் வார்ப்பு விக்கிரகங்களை உண்டுபண்ணினதோடு யெரோபெயாம் அவன் தேசத்து மக்களையும் வழிவிலகச் செய்ததால் நாட்டிற்கு நேரவிருக்கும் தீமையையுங்கூறிப் பட்டணத்தின் வாசலில் யெரொபொயமின் மனைவி காலடியெடுத்து வைக்கும் சமயம் அவளுடைய மகன் மரித்துப்போவான் என்ற துக்க செய்தியையும் கூறினான். இக்கட்டு நேரத்தில் யெரொபெயாமுக்கு நினைவிற்கு வந்தவர் ஒரு தீர்க்கதரிசியே! தான் துன்மார்க்கனாயினும் அவரே தனக்காக ஜெபித்து உதவமுடியும் என்பதையும் அறிந்திருந்தான். யெரோபெயாமின் மகன் இறந்துபோனான் என்பது உண்மையேயெனினும், இந்த நிகழ்ச்சி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தாங்களே வேண்டுதல் செய்யாதிருந்தும் ஜெபிக்கும் கடவுளுடைய பிள்ளைகளின் வேண்டுதலில் நம்பிக்கை வைத்த துன்மார்க்கர் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
எரேமியா தீர்க்கதரிசி காலத்தில் வாழ்ந்த யோகனானைப் பாருங்கள். எருசலேம் பாபிலோனியரால் கைப்பற்றப்பட்டு மக்கள் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் ஒரு சிலர் எருசலேமின் பின்னாக விடப்பட்டனர். யோகனானும், எரேமியாவும் அவர்களுக்குள் இருவர். இஸ்மவேல் , பாபிலோன் மன்னன் தேசத்தின்மேல் அதிபதியாக்கின கெதலியாவை வெட்டிப்போட்டான். பாபிலோனியருக்குத் தப்ப எஞ்சியிருந்த மக்களை எகிப்திற்கு அழைத்துச் செல்ல யோகனான் திட்டம் தீட்டினான். ஆனால் கடவுளுடைய சித்தம் வேறாயிருந்தது. எகிப்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு மக்களை ஒன்றுதிரட்டி எரேமியாவிடம் வந்து தாங்கள் செய்யவேண்டியது இன்னது என்று புலப்படும்படியாகத் தங்களுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள் (எரேமி.42:2-3). எரேமியாவும் உடனே அவர்களுக்காக ஜெபித்தான். ஜெபத்திற்கு பதில் பத்து நாட்களுக்குப் பின் கிடைத்தது. கர்த்தர் திட்டமும் தெளிவுமாய் மக்கள் எகிப்பதிற்குச் செல்லக்கூடாதெனவும், எருசலேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தங்கியிருக்கவேண்டுமெனவும் கூறியதை மக்களிடம் கூறினான் எரேமியா. யோகனானும் மக்களும் கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லையெனினும் தீர்க்கதரிசியின் வேண்டுதல்பேரில் நம்பிக்கை கொண்டிருந்ததை இந்த நிகழ்ச்சி நன்கு தெளிவாக்கும்.
இன்னும் ஓர் எடுத்துக்காட்டையும் நாம் பழைய ஏற்பாட்டில் காணலாம். சிதேக்கியா யூதாவின் கடைசி மன்னன். இவனுடைய ஆட்சிக் காலத்தில் எருசலேம் பாபிலோனிய மன்னன் நேபுகாத்நேச்சார் என்பவனால் முற்றுகையிடப்பட்டது. அச்சயம் பஸ்கூர், செப்பனியா என்ற இருவரை சிதேக்கியா எரேமியாவிடம் அனுப்பி மக்களுக்காகவும், தனக்காகவும் ஜெபிக்கும்படி கேட்டான் (எரேமி.21:2). எரேமியாவின் ஜெபத்தைக் கேட்ட கடவுள் சிதேக்கியா செய்யவேண்டுவது இன்னது என்பதை வெளிப்படுத்தினதோடு நிகழவிருப்பனவற்றையும் தெளிவாகக் காண்பித்தார். சிதேக்கியா யோகனானைப்போலவே கடவுள் சொல்லியபடி செய்யாமல் நேர் விரோதமாகச் செயல்ப்பட்டான். என்றாலும் கடவுளுடைய பிள்ளையின் ஜெபத்தில் நம்பிக்கை வைத்திருந்தானென்பதும் நோக்கத்தக்கது. ஜெபமே தெய்வ சித்தத்தையறியக்கூடிய வழி என்பதை சிதேக்கியா அறிந்திருந்தான்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்களிடையே ஜெபம் முக்கியத்துவம் பெற்றிருந்ததை இந்த எடுத்துக்காட்டுக்கள் நன்கு புலப்படுத்துகின்றன. துன்மார்க்கரும், கடவுளுடைய கற்பனையை வேண்டுமென்றே மீறினவர்களும்கூட, ஜெபிக்கும் கடவுளுடைய பிள்ளைகளின் வேண்டுதலில் நம்பிக்கை வைத்திருந்தனரென்பது தெளிவு. பழைய ஏற்பாட்டை வாசிக்கும் ஒவ்வொருவரும் இதனைத் திட்டவட்டமாய் அறிந்துகொள்வர். பழைய ஏற்பாட்டுக் காலத்திய நிலை இத்தகையதாயின் இன்றைய மக்களாகிய நாம் எந்த அளவில் ஜெபத்தின் தேவையை உணர்ந்து ஜெபத்தின் கிரியையில் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்க கடமைப்பட்டுள்ளோம். அன்றைய மக்கள் அவ்விதம் ஜெபித்திருந்தனரெனில் இன்றைய சூழ்நிலையில் மக்கள் வெகுவாய் ஜெபிக்கவேண்டுவது எத்தனை தேவை? 

Ezra Jean Dougan

ezra book
 
 
 

Nehemiah Jean Dougan

nehemiah book
 

Esther Jean Dougan

esther book